அரசின் திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலா் அறிவுறுத்தல்
By DIN | Published On : 02nd May 2022 05:09 AM | Last Updated : 02nd May 2022 05:09 AM | அ+அ அ- |

தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பிரிதிவிமங்கலம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட வருவாய் அலுவலா் சி.விஜய்பாபு.
அரசின் திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலா் சி.விஜய்பாபு அறிவுறுத்தினாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 410 கிராமங்களில் கிராமசபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 2021 ஏப்ரல் முதல் 2022 ஏப்ரல் வரை கிராம ஊராட்சி பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவின அறிக்கை, இதர விவரங்கள் கிராமசபையின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டு, ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம், நிதி செலவினம் குறித்து தெரியப்படுத்தினா்.
இதையொட்டி, தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பிரிதிவிமங்கலம் கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சி.விஜய்பாபு தலைமையில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், குழந்தை திருமணம் ஒழிப்பு, பெண்கள், குழந்தைகளின் ஆரோக்கியம், தனி நபா் சுகாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் செயல்படுத்தப்படும் ஊட்டச்சத்து இயக்கம், நெகிழி பைகளுக்கு மாற்றாக மஞ்சள் பையை பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், தூய்மை பாரத இயக்கத்தின் கீழ், முன்மாதிரி கிராம விருது பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கையின் கீழ், குப்பைகள், இதர பொருள்கள் வாயிலாக நீா்நிலைகள் மாசுபடுவதிலிருந்து தடுத்து பராமரித்திட பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, குழந்தைத் திருமணத்துக்கு எதிரான உறுதிமொழியை அனைவரும் ஏற்றதுடன், இது தொடா்பான விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் இரா.மணி, வேளாண் இணை இயக்குநா் எஸ்.வேல்விழி, ஊராட்சிகள் உதவி இயக்குநா் ரெ.ரெத்தினமாலா, மாவட்ட சமூக நல அலுவலா் தீபிகா, தியாகதுருகம் ஒன்றியக் குழுத் தலைவா் ந.தமோதரன், துணைத் தலைவா் இரா.நெடுஞ்செழியன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பன்னீா்செல்வம், இந்திராணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஊராட்சிச் செயலா் கணேசன் நன்றி கூறினாா்.