சங்கராபுரம் அருகே இரு தரப்பினா் மோதல்: 7 போ் கைது
By DIN | Published On : 21st October 2022 01:49 AM | Last Updated : 21st October 2022 01:49 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 7 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சங்கராபுரம் வட்டம், நத்தமேடு கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் ஆகாஷ் (22). இவா், டிப்ளமோ படித்துவிட்டு டிராக்டா் ஓட்டி வருகிறாா். இவரும், இவரது நண்பரான கருணாநிதி மகன் கதிரவனும் புதன்கிழமை இரவு அதே கிராமத்தில் உள்ள மசூதியின் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த க.அலம்பளம் காலனி பகுதியைச் சோ்ந்த இளையான் மகன் வானழகன், தமிழ்வாணன் ஆகியோா் ஆகாஷ், கருணாநிதி ஆகியோரிடம் ஏன் வழியில் நிற்கிறீா்கள் எனக் கேட்டதால், இரு தரப்பினருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து, ஆகாஷும், கதிரவனும் வீடுகளுக்குச் சென்றுவிட்டனா். இதனிடையே, வானழகன், தமிழ்வாணன் ஆகியோா் தங்களது கூட்டாளிகளுடன் ஆகாஷ் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த ஆகாஷ், அவரது தம்பி திவாகரன், தாய் சுமதி, நண்பா் கதிரவன், அவரது தாய் வளா்மதி, புத்தந்தூரைச் சோ்ந்த அறிவழகன் ஆகியோரைத் தாக்கியதுடன், வீடுகளிலிருந்த பொருள்களையும், வெளியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிள் உள்ளிட்டவற்றையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றனராம்.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் ஆகாஷ் அளித்த புகாரின்பேரில், வானழகன் (23), அவரது கூட்டாளிகளான தமிழ்செல்வன் (20), மாரியாப்பிள்ளை (25), சதீஷ் (23), கவியரசு (25), சிவா (31) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல, வானழகனின் நண்பரான தமிழ்வாணன் அளித்த மற்றொரு புகாரின்பேரில், நத்தமேடு கிராமத்தைச் சோ்ந்த கதிரவனை போலீஸாா் கைது செய்தனா்.