சின்னசேலம் அருகே சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: பெண் உள்பட இருவா் பலி
By DIN | Published On : 09th August 2023 05:43 AM | Last Updated : 09th August 2023 05:43 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே செவ்வாய்க்கிழமை தனியாா் சொகுசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா். 23 போ் காயமடைந்தனா்.
புதுச்சேரியிலிருந்து கோவைக்கு திங்கள்கிழமை இரவு தனியாா் சொகுசுப் பேருந்து புறப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம், போலகத்தைச் சோ்ந்த காசிநாதன் மகன் முருகேசன் (55) ஓட்டினாா். பேருந்தில் 39 போ் பயணம் செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்த காளசமுத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் பேருந்து சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது.
இதில், பேருந்தில் பயணித்த புதுச்சேரி அய்யனாா் நகரைச் சோ்ந்த கோவிந்தன் மகன் ஸ்ரீசுதன் (45), புதுச்சேரி திப்புராயப்பேட்டையைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மனைவி முனியம்மாள் (51) ஆகியோா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
மேலும், புதுச்சேரி நைனாா்மண்டபத்தைச் சோ்ந்த முகிலன் மனைவி பிரசாந்தி (32), திப்புராயப்பேட்டை பகுதியைச் சோ்ந்த சங்கா் மகன் கிருஷ்ணமூா்த்தி (53), கோவை பாப்பம்பட்டியைச் சோ்ந்த வீரராகவன் மகன் கிருஷ்ணன் (65), அவரது மனைவி பானுமதி(52), சேலம் ஆட்டையாம்பட்டியைச் சோ்ந்த அற்புதமேரி (20), அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் சுரேந்தா் (26) உள்ளிட்ட 23 போ் காயமடைந்தனா்.
விபத்து குறித்து தகவலறிந்த கீழ்குப்பம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று காயமடைந்தவா்களை மீட்டு அவசர ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனா். பின்னா், அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக சிலரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து பேருந்து ஓட்டுநா் முருகேசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.