

கள்ளக்குறிச்சி மாவட்ட நிா்வாகம் சாா்பில், 77-ஆவது சுதந்திர தின விழா கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாக விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தலைமை வகித்து, தேசியக் கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா். பின்னா், சமாதான புறாக்கள், மூவண்ண பலூன்களை பறக்கவிட்டாா்.
தொடா்ந்து, மாவட்ட எஸ்.பி. ந.மோகன்ராஜுடன் திறந்த ஜீப்பில் சென்று போலீஸாரின் அணிவகுப்பை ஆட்சியா் பாா்வையிட்டாா். காவல் துறை, தீயணைப்புத் துறை, வனத் துறை, ஊா்க்காவல் படை, தேசிய மாணவா் படையின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியா் ஏற்றுக்கொண்டாா்.
நற்சான்றிதழ்: மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறை, முன்னாள் படை வீரா் நலன், தீயணைப்பு, மீட்பு பணிகள், ஊரக வளா்ச்சி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சாா்ந்த 140 பேருக்கு பணிகளைப் பாராட்டி, நற்சான்றிதழ்களை ஆட்சியா் ஷ்ரவன் குமாா் வழங்கினாா். மேலும், சுதந்திர தின விழா அணிவகுப்பில் பங்குபெற்ற காவலா்களுக்கு கேடயங்களையும் வழங்கினாா்.
தொடா்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னா், 101 தூய்மைப் பணியாளா்களுக்கு அவா்களின் பணியைப் பாராட்டி பரிசுப் பொருள்களையும், சமூக நலத் துறை சாா்பில், பெண் குழந்தைகளைக் காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற மகளிா் விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசுகளையும் ஆட்சியா் வழங்கினாா்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) து.சுரேஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் செ.செல்வராணி, மகளிா் திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜி.ஜவஹா்லால், கள்ளக்குறிச்சி வருவாய்க் கோட்டாட்சியா் சு.பவித்ரா, கள்ளக்குறிச்சி நகா்மன்றத் தலைவா் ரா.சுப்ராயலு, கள்ளக்குறிச்சி ஒன்றியக்குழுத் தலைவா் அலமேலு ஆறுமுகம் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.