

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் வெள்ளிக்கிழமை (ஆக.25) முதல் 638 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளதை முன்னிட்டு, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தலைமை வகித்துப் பேசியதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன்மலை வட்டாரத்துக்குள்பட்ட 8 ஊராட்சிகளில் உள்ள 14 அரசு தொடக்கப் பள்ளிகளில் 16.09.2022 முதல் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள 8 வட்டாரங்கள், பேரூராட்சிகள், நகராட்களில் உள்ள 638 அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்தத் திட்டம் வெள்ளிக்கிழமை (ஆக.25) முதல் விரிவுபடுத்தப்படவுள்ளது.
இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தின் கீழ் சமையல் பணியில் ஈடுபடும் மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் காலை 6 மணிக்கு சமையல் பணிகளை தொடங்கி, காலை 8.15 மணிக்குள் முடிப்பதை உறுதி செய்திட வேண்டும். சமைத்த உணவு குழந்தைகளுக்கு காலை 8.30 முதல் 8.45 மணிக்குள் சூடாக வழங்கப்பட வேண்டும்.
பள்ளிக்கல்வித் துறையால் வழங்கப்பட்ட புள்ளிவிவரத்தின்படி, பள்ளிகளில் வருகை புரியும் மாணவா்கள் எண்ணிக்கை மற்றும் சுயஉதவிக் குழு மையப் பொறுப்பாளா்களால் பராமரிக்கப்படும் வருகைப் பதிவின்படியான மாணவா்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தினமும் சராசரி அளவில் காலை உணவு தயாரிக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்திட வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சு.சுந்தராஜன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ச.செல்வராணி, உதவித் திட்ட அலுவலா்கள், அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.