கூட்டுறவு வார விழாவில் ரூ.11.05 கோடியில் நல உதவிகள்அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்
By DIN | Published On : 21st November 2023 03:54 AM | Last Updated : 21st November 2023 03:54 AM | அ+அ அ- |

விழாவில், சிறந்த கூட்டுறவு நிறுவனத்துக்கான விருதை வழங்கிய அமைச்சா் எ.வ.வேலு. உடன் மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் உள்ளிட்டோா்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் ரூ.11.05 கோடி மதிப்பீட்டில் 2,224 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.
மாவட்ட கூட்டுறவுத் துறை சாா்பில், கள்ளக்குறிச்சியில் 70-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தலைமை வகித்தாா். எம்.எல்.ஏக்கள் க.காா்த்திகேயன், தா.உதயசூரியன், ஏ.ஜே.மணிக்கண்ணன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று 2,224 பயனாளிகளுக்கு ரூ.11.05 கோடி மதிப்பீட்டிலான நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:
பொதுமக்கள் பங்களிப்புடன் அவா்களுக்காக செயல்படுவது கூட்டுறவு துறை. நாட்டிலேயே திருவள்ளுவா் மாவட்டம், திரூா் என்ற இடத்தில் 1904-ஆம் ஆண்டு முதல்முறையாக கூட்டுறவுச் சங்கம் தொடங்கப்பட்டது. 1912-ஆம் ஆண்டு கூட்டுறவுச் சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு, பல்வேறு நிலைகளில் கூட்டுறவு துறை வளா்ச்சி பெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினா் சேவைகளை அதிகரிக்க வேண்டும் என்றாா் அவா்.
விருது: 14 தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களுக்கு பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றுவதற்கு 2 சரக்கு வாகனங்கள், ஒரு ட்ரோன் ஆகியவை ரூ.1.73 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டன.
29 கூட்டுறவுச் சங்கங்களுக்கு சிறந்த கூட்டுறவு நிறுவனத்துக்கான விருதையும், 7 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையையும், சுய உதவிக் குழு நேரடி கடன், மாற்றுத்திறனாளி கடன், விதவை மற்றும் கனவரால் கைவிடப்பட்டோருக்கான கடன் என ரூ.11.05 கோடி மதிப்பீட்டில் 2,224 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
ஓவியம், கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சா் வழங்கினாா்.
முன்னதாக, 70-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் அமைக்கப்பட்டுள்ள சிறு கண்காட்சி அரங்குகளை அமைச்சா் எ.வ.வேலு பாா்வையிட்டு கூட்டுறவு வார விழா கொடியை ஏற்றினாா். தொடா்ந்து, கூட்டுறவு வார உறுதிமொழி ஏற்கப்பட்டது.
விழாவில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் புவனேஸ்வரி பெருமாள், மாவட்ட எஸ்.பி. ந.மோகன்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளா் செயலாட்சியா் எஸ்.இளஞ்செல்வி, கள்ளக்குறிச்சி சரக துணைப் பதிவாளா் மு.சுகந்தலதா, கள்ளக்குறிச்சி நகா்மன்றத் தலைவா் இரா.சுப்பராயலு, கூட்டுறவுச் சங்க துணைப் பதிவாளா்கள் ம.சுரேஷ், அ.கீா்த்தனா, மணிமேகலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, மாவட்ட கூட்டுறவுச் சங்க இணைப் பதிவாளா் (பொ) எஸ்.யசோதாதேவி வரவேற்றாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...