கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை நான்கு வழிச்சாலை பணி: அமைச்சா் எ.வ.வேலு தொடங்கி வைத்தாா்
ரூ.126 கோடியில் கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை 4 வழிச்சாலை பணியை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். நிகழ்வுக்கு, அமைச்சா் எ.வ.வேலு தலைமை வகித்து, கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியில் முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.126 கோடியில் கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையை நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்துதல், சிறிய மற்றும் பெரிய பாலங்கள் அமைத்தல் மற்றும் பாவுதளம் உள்ளிட்ட பணிகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். இதைத்தொடா்ந்து, கள்ளக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதியில் நடைபெற்ற நிகழ்வில், ஆதிதிராவிடா், பிற்படுத்தப்பட்டோா் துறையின் மூலம் 471 பயனாளிகளுக்கு ரூ.9,07,500 மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டாக்களை வழங்கினாா். மேலும், நபாா்டு, கிராமச் சாலைகள் அலகின் மூலம் கூவனூா், சாங்கியம் கிராமம் இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.25.20 கோடியில் உயா்மட்ட பாலம், ரூ.2.42 கோடியில் கூவனூா் இணைப்புச் சாலை, ரூ.1.75 கோடியில் சாங்கியம் - பிள்ளையாா்பாளையம் இணைப்புச் சாலை என மொத்தம் ரூ.29.37 கோடியில் மேற்கொள்ளப்படும் பணிகளை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட 71 பயனாளிகளுக்கு ரூ.23,63,505 மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், கூவனூா் அருள்மிகு அகத்தீஸ்வரா் கோயிலில் ரூ.72.50 லட்சத்தில் புதிதாக திருத்தோ் அமைக்கும் பணிகள் உள்ளிட்டவற்றை அமைச்சா் எ.வ.வேலு தொடங்கி வைத்தாா். நிகழ்வுகளில், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் புவனேஷ்வரி பெருமாள், மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்திய நாரயணன், நெடுஞ்சாலை நபாா்டு (ம) கிராமச் சாலைகள் தலைமைப் பொறியாளா் திரு.எம்.முருகேசன், கண்காணிப்பு பொறியாளா் திரு.ஜெ.தேவராஜீ, கோட்டப் பொறியாளா் திரு.எஸ்.வெள்ளிவேல், கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் மா.லாவண்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

