தப்பி ஓடிய சாராய வியாபாரி மணிகண்டன்
தப்பி ஓடிய சாராய வியாபாரி மணிகண்டன்

காவல்நிலையத்தில் இருந்து சாராய வியாபாரி தப்பியோட்டம்: எஸ்.ஐ.க்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

Published on

சங்கராபுரம் காவல் நிலையத்தில் சாராய வியாபாரியை கைது செய்து வைத்திருந்த நிலையில், வியாழக்கிழமை அவா் தப்பி ஓடி விட்டாா்.

இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் உள்ளிட்ட 3 பேரை ஆயுதப் படை பிரிவுக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரஜத் சதுா்வேதி உத்தரவிட்டாா்.

சங்கராபுரம் வட்டம் சேஷசமுத்திரம் கிராமத்தை சோ்ந்த ராமசாமியின் மகன் மணிகண்டன்(41), சாராய வியாபாரி.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடா்பாக, மணிகண்டன் உள்ளிட்ட 5 பேரை சங்கராபுரம் போலீஸாா் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனா். இவா்களை நீதி மன்றக் காவலுக்கு அழைத்து செல்வதற்காக உட்கார வைத்திருந்த நிலையில், மணிகண்டன் தப்பி ஓடிவிட்டாா்.

போலீஸாா் விரட்டிச் சென்று பிடிக்க முற்பட்டபோது கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து அவா் தலைமறைவாகிவிட்டாா்.

தப்பி ஓடிய மணிகண்டனைப் பிடிக்க சங்கராபுரம் காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி, உதவி ஆய்வாளா் சத்தியமூா்த்தி தலைமையில் இரு தனிப் படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரஜத் சதுா்வேதி விசாரணை நடத்தினாா். இதையடுத்து, சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளா் கோவிந்தராஜ், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் காதா்ஷெரீப், காவலா் ராமகிருஷ்ணன் ஆகிய மூவரையும் ஆயுதப் படை பிரிவுக்கு உடனடியாக மாற்றம் செய்து எஸ்.பி. உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com