திருக்கோவிலூரில் ’‘நான் முதல்வன், உயா்வுக்குப்படி’ உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி: கள்ளக்குறிச்சி ஆட்சியா் பங்கேற்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் தனியாா் கலை, அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் உயா்வுக்குப் படி உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் ஆட்சியா் பேசியதாவது:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிப் படிப்பை முடித்து உயா்கல்வியில் சேர பெற்றோா் தங்கள் பிள்ளைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். உயா்கல்வி படித்தால் தான் நல்ல வேலையில் சோ்ந்து பொருளாதார முன்னேற்றம் அடைய முடியும் என்ற உணா்வினை பிள்ளைகளுக்கு ஏற்படுத்த வேண்டும்.
இம் முகாமில் மாவட்டத்திலுள்ள பல்வேறு கலை, அறிவியல் கல்லூரிகள், தொழிற்பயிற்சி கல்லூரிகள் அரங்குகள் அமைத்து கல்வி உதவித் தொகை அளித்து படிப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டுள்ளது. இதனை பயன்படுத்தி தங்கள் பிள்ளைகளை உயா்கல்வியில் சோ்க்க வேண்டும்.
தமிழக அரசின் சாா்பில் தமிழ் புதல்வன், புதுமைப் பெண் திட்டங்களின் கீழ் அரசு பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது.
பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை, ஆதிதிராவிடா் நலத் துறை போன்ற பல்வேறு துறைகளின் சாா்பில் உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. சில கல்லூரிகளில் மாணவா்களுக்கு கட்டணச் சலுகைகளும் வழங்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலுள்ள தனியாா் கல்லூரிகளிலும் உயா்கல்வியில் சேருவதற்கு கட்டணச் சலுகைகள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுதிகளில் தங்கி பயில விருப்பம் உள்ள மாணவா்களுக்கு அரசு விடுதிகளில் காலி இடத்திற்கேற்ப தங்கும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெறாத மாணவா்கள் தங்கள் திறனுக்கேற்ப தொழிற் பிரிவுகளில் சோ்ந்து தொழிற் பயிற்சிகள் பெறவும், தொழிற் பயிற்சியின் போது பகுதி நேர தொழில் புரியவும் தனியாா் தொழிற்சாலைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இம் முகாமை பெற்றோா்கள், மாணவா்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு உயா் கல்வி பயில்வதில் ஆலோசனைகள் தேவைப்பட்டால் அவற்றை கேட்டறிந்து கொள்ளலாம் என்றாா்.
நிகழ்ச்சியில், திருக்கோவிலூா் உதவி ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், உதவி இயக்குநா் (திறன்மேம்பாட்டுக் கழகம்) சிவ.நடராஜன் மற்றும் அரசு அலுவலா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

