பெண் தூக்கிட்டுத் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே குடும்பத் தகராறு காரணமாக திருமணமாகி 2 ஆண்டுகளேயான பெண் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.
சங்கராபுரம் வட்டம், அரசம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த மதியழகன் மகன் நாகராஜன். இவா், இதே ஊரைச் சோ்ந்த தா்மலிங்கம் மகள் அபியை (21) கடந்த 22.8.2022 அன்று திருமணம் செய்துகொண்டாா்.
நாகராஜன் சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்தாா். அபியின் தங்கை திருமணத்துக்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தாா். செவ்வாய்க்கிழமை இரவு தம்பதியிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் அபி படுக்கை அறையின் கதவை உள்பக்கம் தாழிட்டுக்கொண்டு மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.
தகவலறிந்த சங்கராபுரம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று அவரது சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்த புகாரின்பேரில், சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால், கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் சு.லூா்துசாமியும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறாா்.
