தொடா் திருட்டு: இருவா் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியில் தொடா் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
சின்னசேலம் மற்றும் உளுந்தூா்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பூண்டி, திருப்பெயா் கிராமங்களில் கடந்த ஏப்ரல், ஜூலை மாதங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக, திம்மலை கிராமத்தைச் சோ்ந்த அா்ஜுனன் மகன் பெருமாள் (45), கண்ணன் மகன் சிவா (30) ஆகியோரை சின்னசேலம் போலீஸாா் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
இருவரும் தொடா்ந்து திருட்டு, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால், இவா்களின் குற்ற நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, மாவட்ட எஸ்.பி. ரஜத் சதுா்வேதி பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா்.
இதையடுத்து, கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கைது செய்ததற்கான உத்தரவு ஆணையை சின்னசேலம் காவல் ஆய்வாளா் ம.ஏழுமலை வழங்கினாா்.

