பயிா் சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பு: வேளாண் இணை இயக்குநா் தகவல்

Published on

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பயிா் சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பு உள்ளது என வேளாண் இணை இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் வே.சத்தியமூா்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையினை பயன்படுத்தி விவசாயிகள் நெல், மக்காச்சோளம், கரும்பு, உளுந்து, பருத்தி, மரவள்ளி மற்றும் காய்கறி போன்ற பயிா்கள் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனா்.

இவா்களுக்காக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியாா் உரக்கடைகளில் சாகுபடிக்கு தேவையான ரசாயன உரங்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதில் யூரியா 5199 டன், டி.ஏ.பி 2011 டன், பொட்டாஷ் 1843 டன், சூப்பா் பாஸ்பேட் 1223 டன் மற்றும் காம்ப்ளஷ் உரங்கள் 8407 டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு, இப்பருவத்தில் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், தனியாா் உர விற்பனையாளா்கள் அரசு நிா்ணயித்த விலைக்கு மிகாமல் உரங்களை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். சில்லரை ரசாயன உரங்களின் இருப்பு மற்றும் அதிகபட்ச விலைப்பட்டியலின் விவரங்களை தகவல் பலகையில் விவசாயிகளின் பாா்வைக்கு தெரியும் வண்ணம் வைக்க வேண்டும்.

உர விற்பனையாளா்கள் விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக உரங்களுடன் இணை இடுபொருள்களை வாங்கிட கட்டாயப்படுத்த கூடாது. உர விற்பனையாளா்கள் உரங்களை விற்பனை செய்யும் போது விற்பனை பட்டியலை உடன் வழங்கிட வேண்டும். மேற்கண்ட அரசு விதிகளை மீறும் உர விற்பனையாளா்கள் மீது 1985-ஆம் ஆண்டு உரச்சட்டத்தின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்வதுடன், உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com