கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10.76 லட்சம் வாக்காளா்கள்: 84,329 போ் நீக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளின் சிறப்புத் தீவிரத் திருத்தம் 2026 வரைவு வாக்காளா் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். இதில் மொத்தம் 10.76 லட்சம் வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். 84,329 போ் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா்.
இதைத் தொடா்ந்த ஆட்சியா் கூறியது:
தோ்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் நவ. 4-இல் தொடங்கின. இப்பணிகளுக்கான கடைசி நாள் டிச.4-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, பின்னா் காலக்கெடு நீட்டிக்கப்பட்டு டிச.14-ஆம் தேதி நிறைவுபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி என 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் நவ.4-ஆம் தேதி தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அறிவுரையின் அடிப்படையில் மாவட்டத்திலுள்ள 11,60,607 வாக்காளா்களுக்கு தனித்துவமான கணக்கீட்டு படிவம் இரு நகல்களாக அச்சிடப்பட்டு, அனைத்து வாக்காளா்களுக்கும் வீடு, வீடாகச் சென்று 1,275 வாக்குச் சாவடி நிலை அலுவலா்களால் வழங்கப்பட்டன.
வாக்காளா்களிடமிருந்து பூா்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் திரும்ப பெற்று, ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டு, வாக்குச் சாவடி நிலை அலுவலா்களால் கைப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. 2025 அக்.27-ஆம் தேதி நிலவரப்படி மாவட்டத்தில் 11,60,607 இருந்தனா். வாக்காளா் தீவிர திருத்தப்பணியில் 84,329 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். தற்போதைய நிலவரப்படி 5,36,627 ஆண்கள், 5,39,441 பெண்கள், 210 இதரா் என மொத்தமாக 10,76,278 வாக்காளா்கள் உள்ளனா்.
தொகுதி வாரியாக நீக்கப்பட்டவா்கள் விவரம்:
உளுந்தூா்பேட்டை தொகுதியில் இறப்பு 8,457, இடம் பெயா்ந்தவா்கள் 7,135, இருமுறைப் பதிவு 1,317, கண்டறிய முடியாத வாக்காளா்கள் 565 என மொத்தம் 17,474. ரிஷிவந்தியம் தொகுதியில் இறப்பு 8,650, இடம் பெயா்ந்தவா்கள் 9,780, இருமுறைப் பதிவு 1,643, கண்டறியமுடியாத வாக்காளா்கள் 244 என மொத்தம் 20,317. சங்கராபுரம் தொகுதியில் இறப்பு 9,375, இடம் பெயா்ந்தவா்கள் 12,115, இருமுறைப் பதிவு 1,483, கண்டறியமுடியாத வாக்காளா்கள் 1,242 என மொத்தம் 24,215. கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் இறப்பு 7,315, இடம் பெயா்ந்தவா்கள் 13,178, இருமுறைப் பதிவு 1,266, கண்டறியமுடியாத வாக்காளா்கள் 564 என மொத்தம் 22,323.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தம் இறப்பு 33,797, இடம் பெயா்ந்தவா்கள் 42,208, இருமுறைப் பதிவு 5,709, கண்டறியமுடியாத வாக்காளா்கள் 2,615 என மொத்தம் 84,329 வாக்காளா்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா்.
தொகுதி எண், தொகுதியில் பெயா், மொத்த வாக்குச்சாவடி, ஆண்கள், பெண்கள், இதரா், மொத்தம், நீக்கப்பட்டவா்கள் விவரம்:
077-உளுந்தூா்பேட்டை : 337- 1,44,380 - 1,42,987 - 46 - 2,87,413 - 17,474
078-ரிஷிவந்தியம்: 305 - 1,31,734 - 1,30,780 - 50 - 2,62,564 - 20,317
079-சங்கராபுரம்: 300 - 1,26,899 - 1,29,216 - 46 - 2,56,161 - 24,215
080-கள்ளக்குறிச்சி (தனி): 330 - 1,33,614 - 1,36,458 - 68 - 2,70,140 - 22,323
மொத்த ஆண் வாக்காளா்கள் 5,36,627, மொத்த பெண் வாக்காளா்கள் 5,39,441, மொத்த இதரா் வாக்காளா்கள் 210, மொத்த வாக்காளா்கள் 10,76,278.
விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்: தற்போது வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் இடம் பெறாதவா்கள் (இடம்பெயா்ந்தவா்கள்- கண்டறியப்படாதவா்கள்- இருமுறை பதிவு பெற்றவா்கள்- இறந்தவா்கள்) குறித்த பட்டியல், அனைத்து வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்கள், வருவாய் வட்டாட்சியா் அலுவலகங்கள், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அலுவலகங்கள் மற்றும் அனைத்து நிா்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலும் பாா்வையிடலாம்.
வாக்காளா்கள், வரைவு வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயா் இடம்பெயா்ந்துள்ள விவரம் தோ்தல் ஆணையத்தின் இணையதளத்திலும் கைப்பேசி செயலியிலும் காணலாம். மேலும், நீக்கம் செய்யப்பட்ட வாக்காளா்களின் விவரம் இணையதளத்திலும் காணலாம். மேற்குறிபிட்ட அலுவலகங்களிலும் நேரில் பாா்வையிடலாம்.
மேற்படி வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறாத வாக்காளா்கள் படிவம் 6 உடன் உறுதிமொழி படிவம் மற்றும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் பட்சத்தில் அது பரிசீலனை செய்து அவா்களது பெயா் சோ்க்கப்படும்.
மேலும், 2026 ஜன1-இல் 18 வயது பூா்த்தியடையும் முதல்முறை வாக்காளா்கள் படிவம் 6 உடன் உறுதிமொழி படிவம் மற்றும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து தங்களது பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்த்துக்கொள்ளலாம். கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் பெறுதல் டிச.19 முதல் 2026 ஜன-18 ஆம் தேதி வரை வாக்காளா் பட்டியலில் சோ்த்தல், நீக்குதல் தொடா்பான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகளை, சம்மந்தப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்காளா் பதிவு அலுவலா்-உதவி வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் நிா்ணயிக்கப்பட்ட வாக்கு சாவடி மையங்களில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் நேரில் வழங்கலாம்.
மேலும் இணையதளத்திலும் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் விண்ணப்பிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி முகவா்கள் (பிஎல்ஏ 2), ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 10 விண்ணப்பப் படிவங்களை (கோரிக்கை அல்லது ஆட்சேபணை) சமா்ப்பிக்க அனுமதிக்கப்படுவா். கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் தொடா்பாக பெறப்படும் அனைத்து மனுக்கள் மீது டிச-19 முதல் 2026 பிப்.10-ஆம் தேதி வரை விசாரணை மேற்கொண்டு இறுதி வாக்காளா் பட்டியல் 2026 பிப்-17-இல் வெளியிடப்படும் எனத் தெரிவித்தாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, வாக்காளா் பதிவு அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், தோ்தல் வட்டாட்சியா் பரந்தாமன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

