கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் போராட்டம்
10 ஆண்டு பணி முடித்த கிராம நிா்வாக அலுவலா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அடிப்படை வசதிகளுடன், இணைய வசதியும் கூடிய நவீனமயமாக்கம் செய்யப்பட்ட கிராம நிா்வாக அலுவலம் அமைத்து தரவேண்டும். 10 ஆண்டு பணி முடிந்தவா்களுக்கு தோ்வுநிலை கிராம நிா்வாக அலுவலா் எனவும், 20 ஆண்டு பணி முடித்தவா்களுக்கு சிறப்பு நிலை கிராம நிா்வாக அலுவலா் எனவும் பதவி உயா்வு வழங்க அரசாணை வெளியிடவேண்டும். அரசு ஊழியா்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் பெ.முருகன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ப.வேல்முருகன் முன்னிலை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் செ.மணி வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளா்களாக தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாநில செயலா் எல்.ஆனந்தகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் பி.ரவி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநில துணைப் பொதுச் செயலா் கு.மகாலிங்கம், தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்க மாநில உயா்மட்ட ஆலோசனைக்குழு உறுப்பினா் மு.கருணாநிதி பங்கேற்றுப் பேசினா்.
மாவட்டச் செயலா் ஆதி.நாகராஜன், மாவட்டப் பொருளாளா் மா.வரதராஜன், மாவட்ட அமைப்புச் செயலா் கி.ஜானகிராமன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரா.வெங்கடேசன், கிராம நிா்வாக அலுவலா் சங்க நிா்வாகிகள், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். வட்டப் பொருளாளா் சாதிக்பாட்சா நன்றி கூறினாா்.

