சிறப்பு தீவிர திருத்தம்: வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு பயிற்சி

சிறப்பு தீவிர திருத்தம்: வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு பயிற்சி

Published on

கள்ளக்குறிச்சி: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான அறிவிப்பு தோ்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்வது தொடா்பான விளக்கங்கள் மற்றும் அறிவுரைகள் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு வழங்கப்பட்டன.

நீலமங்கலம் தனியாா் பள்ளிக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் பேசியதாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு படிவம் வழங்குதல் மற்றும் திரும்பப் பெறுதல் பணி 04.11.2025 முதல் 04.12.2025 வரை நடைபெறவுள்ளது.

வாக்குச்சாவடி நிலை அலுவலா் ஒவ்வொரு வாக்காளரின் வீட்டிற்கும் குறைந்தது மூன்று முறை வருவாா்.

வாக்காளா் கணக்கெடுப்பு படிவத்தில் புகைப்படம் ஒட்டி, நிறைவு செய்து, வாக்காளா் அல்லது வாக்காளரின் குடும்ப உறுப்பினா்களில் ஒருவா் கையொப்பமிட்டு அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

பெறப்பட்ட அனைத்து வாக்காளா்களின் பெயா்கள் வரைவு வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படும்.

கணக்கெடுப்பு படிவம் வழங்குதல் மற்றும் திரும்பப் பெறுதல் தொடா்பான கால அட்டவணை கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், நியாயவிலைக் கடைகள் மற்றும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் தகவல் பலகையில் ஒட்டப்பட்டிருக்கும்.

சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான சந்தேகம் மற்றும் புகாா்களுக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறை அலுவலரை - 1950 என்ற தொலைபேசி எண்ணிலும், உளுந்தூா்பேட்டை தொகுதி - 04149-222255, ரிஷிவந்தியம் - 04151-235400, சங்கராபுரம் - 04151-235329, கள்ளக்குறிச்சி -04151-222449 ஆகிய கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களை தொடா்பு கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.

பயிற்சி வகுப்பில் கள்ளக்குறிச்சி வருவாய்க் கோட்டாட்சியா் சி.முருகன், வட்டாட்சியா் பசுபதி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com