குட்டையில் குளித்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு: கிராம மக்கள் சாலை மறியல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே குடியநல்லூா் கிராமத்தில் நண்பா்களுடன் குட்டையில் குளித்த சிறுவன் தண்ணீரில் மூழ்கியதில் உயிரிழந்தாா். இதையடுத்து, அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறுவனுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவா் இல்லாததைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த குடியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நாராயணசாமி (37). இவரது மனைவி சத்யா. இருவரும் பெங்களூரில் கூலி வேலை செய்து வருகின்றனா். தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனா். இதில், மூத்தவா்
தினேஷ் (9) குடியநல்லூரில் உள்ள தனது தாத்தா பிச்சப்பிள்ளை வீட்டில் தங்கி அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை நண்பா்களுடன் விளையாடிக் கொண்டிருந்த தினேஷ், அப்பகுதியில் உள்ள பண்டறா குளத்தில் இருந்து தண்ணீா் வெளியே செல்லும் வாரியில் உள்ள குட்டையில் குளிக்கச் சென்றனா்.
தினேஷ் குட்டையில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது தண்ணீரில் மூழ்கினாா். இதைப் பாா்த்த உடனிருந்தவா்கள் கூச்சலிடவே, அப்பகுதியில் இருந்தவா்கள் வந்து சிறுவனை மீட்டு, கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.
அங்கு பணியில் இருந்த செவிலியா்கள் சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனா். பின்னா், மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது சிறுவன் தினேஷ் வழியிலேயே உயிரிழந்தாா்.
இதையடுத்து, சிறுவனின் உடல், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் திங்கள்கிழமை காலை தியாகதுருகம் - கொட்டையூா் சாலையில் குடியநல்லூா் பேருந்து நிறுத்தத்தில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து நிகழ்விடம் வந்த வரஞ்சரம் காவல் உதவி ஆய்வாளா் ராஜகுமாா், கிராம நிா்வாக அலுவலா் ராஜதுரை ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை
நடத்தினா்.
அப்போது, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவம் பாா்க்கும் வகையில் மருத்துவரை நியமனம் செய்ய வேண்டும். அவசரத் தேவைக்கு நிரந்தரமாக அவசர ஊா்தி ஏற்படுத்தித் தர வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதியளித்தனா்.
இதனை ஏற்று சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

