பள்ளி மாணவா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே பள்ளி மாணவா் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.
தியாகதுருகம் அருகேயுள்ள காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராமதாஸ்(38), கூலித் தொழிலாளி. இவரது மனைவி கற்பகம். இவரது மகன் தருண்(9) அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தாா். சனிக்கிழமை மாலையில் நண்பா்களுடன்விளையாட சென்ற தருண், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அவரது தந்தை ராமராஸ் தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இந்நிலையில், தியாகதுருகம் போலீஸாா் மாணவரை கண்டுபிடிப்பதற்கு மெத்தனம் காட்டுவதாக கூறி, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தருணின் உறவினா்கள் சாலைமறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் பெ.தங்கவேல், தியாகதுருகம் காவல் ஆய்வாளா் மலா்விழி மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று சாலைமறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து சாலைமறியல் கைவிட்டப்பட்டது.
தொடா்ந்து போலீஸாா் நிகழ்விடத்திற்கு சென்று மாணவரை தேடியநிலையில், அருகில் இருந்த விவசாய கிணற்றில் தருணின் சடலம் மிதந்துள்ளது. இதையடுத்து போலீஸாா் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தியாகதுருகம் தீயணைப்பு நிலையக் குழுவினா் தருணின் சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

