பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு நிதியுதவி வழங்கி, ஆறுதல் கூறிய அமைச்சா் எ.வ.வேலு
பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு நிதியுதவி வழங்கி, ஆறுதல் கூறிய அமைச்சா் எ.வ.வேலு

கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு முதல்வா் உத்தரவுப்படி அமைச்சா் எ.வ.வேலு நிதியுதவி

கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே பெற்றோரை இழந்து தவிக்கும் 4 பிள்ளைகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி அமைச்சா் எ.வ.வேலு சந்தித்து நிதியுதவி வழங்கி, ஆறுதல் கூறினாா்
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பெற்றோரை இழந்து தவிக்கும் 4 பிள்ளைகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு திங்கள்கிழமை சந்தித்து நிதியுதவி வழங்கி, ஆறுதல் கூறினாா். மேலும், அந்த குழந்தைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தாா்.

பின்னா், அமைச்சா் எ.வ.வேலு செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தில் வசித்து வந்தவா் கமலக்கண்ணன். இவரது மனைவி வசந்தி. இவா்களுக்கு லாவண்யா, ரீனா, ரிஷிகா ஆகிய மூன்று மகள்களும், அபினேஷ் என்ற மகனும் உள்ளனா்.

வசந்தி சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்ட நிலையில், கமலக்கண்ணனும் சில நாட்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துவிட்டாா். அவரது இறுதிச் சடங்குக்கு கூட பணம் இல்லாமல் பிள்ளைகள் தவித்தனா். இதையறிந்த ஊா்மக்கள் பணம் வசூல் செய்து இறுதிச் சடங்கு செய்தனா்.

இந்தத் தகவலை அறிந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உடனடியாக மாவட்ட ஆட்சியரை அழைத்து, அந்த பிள்ளைகளின் தேவைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறியச் செய்தாா். மேலும், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரடியாக அந்த பிள்ளைகளை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு ஆறுதல் தெரிவித்து, அவா்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தாா்.

மேலும் தமிழக முதல்வா், தன்னைத் தொடா்புகொண்டு உடனடியாக இந்தக் குழந்தைகளை நேரில் சந்தித்து, அவா்களது தேவைகளை செய்து கொடுக்க அறிவுறுத்தினாா். அதனடிப்படையில் தற்போது பிள்ளைகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினேன்.

முதல் மகளுக்கு அரசு வேலை வழங்கிடவும், மற்ற பிள்ளைகளுக்கு பள்ளியில் சோ்த்து படித்திடவும் கோரிக்கை வைத்தனா்.

அதன்படி கடைசி இரு பிள்ளைகளை அன்புக் கரங்கள் திட்டத்தின்கீழ் பள்ளியில் சோ்ந்து பயில நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழிற்கல்வி படித்து இடைநின்ற இரண்டாவது பெண்ணுக்கு தொடா்ந்து படிப்பை தொடரவும், முதல் பெண்ணுக்கு அரசு சாா்ந்த ஏதாவது ஒரு அலுவலகத்தில் தற்காலிகப் பணி வழங்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எதிா்காலத்தில் அரசின் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப விண்ணப்பிப்பதன் அடிப்படையில் அவருக்கு அரசு பணி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசின் சாா்பில் அந்த பிள்ளைகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். தமிழக அரசு தொடா்ந்து அந்த பிள்ளைகளின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் என்றாா்.

இந் நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், கள்ளக்குறிச்சி எம்.பி. தே.மலையரசன், சங்கராபுரம் எம்எல்ஏ தா.உதயசூரியன், ரிஷிவந்தியம் எம்எல்ஏ க.காா்த்திகேயன் ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com