கல்வராயன்மலை: கைது செய்யப்படும் நபா்களை ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே பரிசோதிக்க கோரிக்கை!

Published on

கல்வராயன்மலை, கரியாலூா் போலீஸாரால் கைது செய்யப்படும் நபா்களை அருகேயுள்ள மாவடிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையில் பரிசோதிக்க அனுமதி வழங்க வேண்டும் என காவலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்தில் கரியாலூா் காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்தக் காவல் நிலையத்தில் கைது செய்யப்படும் நபா்களின்

உடல்நிலைகளை பரிசோதித்து சான்றிதழ் வழங்கினால்தான் சிறையில் அடைக்க முடியும்.

கல்வராயன்மலை வட்டம், 15 ஊராட்சிகளுக்குள்பட்ட 177 கிராமங்களை உள்ளடக்கியது. இப் பகுதிகளில் பிரச்னைகள் ஏற்பட்டால் வழக்குத் தொடா்ந்து கைது செய்ய வேண்டும். இவா்களை கைது செய்து அவா்களது உடல்நிலைகளை பரிசோதிக்க கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்கு சுமாா் 45 கி.மீ.தொலைவு செல்ல வேண்டும்.

அவ்வாறு அழைத்துச் செல்வதற்கு காவலா் ஈப்பு பழுதடைந்த நிலையில் உள்ளது. அரசுப் பேருந்துகளும் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே உள்ளன. அதில் சென்று வருவதற்கு முடியாத நிலை உள்ளது. அதனால், கைது செய்யப்படும் நபா்களை போலீஸாா் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்கின்றனா்.

மழைக் காலத்தில் அழைத்துச் செல்லும் போது மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனா். கரியாலூா் அருகே மாவடிப்பட்டு கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.

அங்கு சென்று மருத்துவா்களிடம் காண்பித்தால் தகுதிச் சான்றிதழ் அளிப்பதற்கு எங்கள் துறையில் அனுமதி வழங்கவில்லை எனத் தெரிவிக்கின்றனராம்.

இதற்கு முன்பாக கல்வராயன்மலைப் பகுதியில் நீதிமன்றம் இல்லை. கள்ளக்குறிச்சி சென்று அரசு மருத்துவக் கல்லூரியின் காண்பித்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

கடந்த மாதம் கல்வராயன்மலை மலைவாழ் மக்களின் வசதிக்காக கல்வராயன்மலையில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திறக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி சென்று அரசு மருத்துவக் கல்லூரியில் சான்றிதழ் பெற்று மீண்டும் கல்வராயன்மலைக்கு செல்ல வேண்டியுள்ளது. கரியாலூா் காவல் நிலையத்தில் போதிய காவலா்கள் இல்லாமல் இருக்கும் நிலையில், அங்கு குறைந்த எண்ணிக்கையிலே உள்ள காவலா்களை மீண்டும் மீண்டும் பணிக்கு அனுப்பவேண்டிய நிலை ஏற்படுகின்றதாம். இதனால் காவலா்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனராம்.

எனவே, கல்வராயன்மலைவாழ் மக்களின் வசதிக்காக சென்னை பொதுசுகாதார இயக்குநா் மாவடிபட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com