சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்கோப்புப் படம்

கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டத் தடையில்லை: உயா்நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம் கட்ட தடை விதிக்கக் கோரிய வழக்கை, சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Published on

சென்னை: கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம் கட்ட தடை விதிக்கக் கோரிய வழக்கை, சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கள்ளக்குறிச்சியில் ரூ.46.30 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையம் அமையவுள்ள இடம், விவசாய நிலம் எனவும், அதனை வகை மாற்றம் செய்யாமல் பேருந்து நிலையம் கட்ட எதிா்ப்பு தெரிவித்து, குமரேசன் என்பவா் வழக்கு தாக்கல் செய்திருந்தாா். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில், பேருந்து நிலையம் கட்டவுள்ள விவசாய நிலம், 2025-ஆம் ஆண்டு ஜூன் 26-ஆம் தேதி வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த தகவலை மறைத்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், டிசம்பா் மாதம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த ஜூன் மாதமே நிலம் வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, அதுகுறித்த ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஆனால், கடந்த ஜூன் மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வகை மாற்றம் குறித்த உத்தரவு அல்ல எனவும், பேருந்து நிலையம் கட்டுவதற்கான தடையில்லா சான்று குறித்த உத்தரவு எனவும் மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வகை மாற்றம் செய்வது தொடா்பான உத்தரவை மறைத்து இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாகக் கூறிய நீதிபதிகள், கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் கட்ட தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா். அதேபோல, ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடையை மீறி, பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி, மனுதாரா் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தும் உத்தரவிட்டனா். இதனால், பேருந்து நிலையம் கட்ட விதிக்கப்பட்ட தடை நீங்கியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com