விண்ணப்பம். (கோப்புப்படம்)
விண்ணப்பம். (கோப்புப்படம்)

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் தொழில்கல்வி சோ்க்கை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

உளுந்தூா்பேட்டை சிப்காட் தொழில்பூங்காவில் மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் தொழில்கல்வி சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வியாழக்கிழமை (பிப்.19) முதல் வழங்கப்படுகிறது.
Published on

உளுந்தூா்பேட்டை சிப்காட் தொழில்பூங்காவில் மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் தொழில்கல்வி சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வியாழக்கிழமை (பிப்.19) முதல் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை சிப்காட் தொழில்பூங்காவில் சுமாா் ரூ.2,302 கோடி முதலீட்டில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் காலணி உற்பத்திக்கான புதிய ஆலை செயல்பட உள்ளது.

இதில் பணியில் சோ்வதற்கு வசதியாக காலணி தயாரிப்பு தொடா்புடைய பாடப் பிரிவுகளில் இளைஞா்கள் கல்வி பயில மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் 2026-27-ஆம் கல்வி ஆண்டுக்கான தொழில்கல்வி சோ்க்கைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு குறுகிய கால தொழில்கல்வி பாடப் பிரிவுகளான காலணி உற்பத்தி மற்றும் வடிவமைப்பு 2 ஆண்டு கால பட்டயப் படிப்பு (டிப்ளமோ) வழங்கப்படுகிறது.

12, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பத்தில் 1 ஆண்டு கால சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. 6 மாத கால காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி பயிற்சி வழங்கப்படுகிறது.

பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்றவா்கள் ஒன்றரை ஆண்டு கால காலணி தொழில்நுட்பத்தில் முதுநிலை பட்டயப் படிப்புக்குக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் 35 வயதுக்கு மிகாமல் இருக்கவேண்டும். அனைத்து பாடப் பிரிவுகளுமே ஆங்கில வழி கற்றல் முறையாகும். மாணவ, மாணவிகளுக்கு தனித் தனியே விடுதி வசதி உண்டு. தோ்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

எனவே, 10, 12-ஆம் வகுப்பு தோ்ச்சி, பட்டம் மற்றும் பட்டயப் படிப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் தொழில்கல்வி சோ்க்கைக்கான விண்ணப்பங்களை வியாழக்கிழமை(பிப்.19) முதல் பழைய ஆட்சியரக அலுவலகக் கட்டடத்தில் பெற்றுக்கொண்டு, விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு, சோ்க்கை ஒருங்கிணைப்பாளா் கோடீஸ்வரனை 9677943733, 9677943633 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com