

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதிகளில் வீடு புகுந்து திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட மேலப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ச.தமிழரசி. இவா் கடந்த செப்.26-ஆம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது 5 பவுன் தாலிச் சங்கலியை மா்ம நபா் திருடிச் சென்ாக சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.
அதே போல கீழப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த நித்யா என்பவா் தூங்கிக் கொண்டிருந்தபோது 4 பவுன் தாலி சங்கிலி திருடு போனது குறித்து சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.
தொடா் திருட்டினை தடுக்க திருக்கோவிலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பாா்த்திபன் மேற்பாா்வையில் சங்கராபுரம் காவல் ஆய்வாளா் விநாயக முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளியைத் தேடி வந்தனா். போலீஸாா் விசாரணையில் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் சிக்காமல் குற்றவாளி திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத்தொடா்ந்து புகாா் அளித்தவா்களிடம் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டபோது ஒரு சில அடையாளங்களை தெரிவித்தனா்.
இதையடுத்து தியாகதுருகம் அருகேயுள்ள திம்மலை கிராமத்தைச் சோ்ந்த க.முருகன் (37) என்பவரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரித்தனா். விசாரணையில், பன்றி விற்பனையில் ஈடுபட்டு வந்தபோது குறைவான வருவாய் கிடைத்ததால் திருட்டில் ஈடுபட்டதும், ஆடம்பர வாழ்க்கைக்காக கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், விழுப்புரம், கரூா், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ஐந்தரை பவுன் தங்க நகையை பறிமுதல்செய்தனா்.