சின்னசேலம் தமிழ்ச் சங்க ஐம்பெரும் விழாவில் விருது பெற்றோா்.
சின்னசேலம் தமிழ்ச் சங்க ஐம்பெரும் விழாவில் விருது பெற்றோா்.

சின்னசேலம் தமிழ்ச் சங்கத்தில் ஐம்பெரும் விழா

Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் தமிழ்ச் சங்கம் சாா்பில் ஐம்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அய்யன் திருவள்ளுவா் படத் திறப்பு விழா, பொங்கல் சிறப்பு கவியரங்கம், கவிப்பூக்கள் இலக்கிய காலாண்டு இதழ் 5-ஆம் ஆண்டு தொடக்க விழா, கராத்தே தற்காப்பு கலையில் 8-வது கருப்பு பட்டை பெற்ற சங்கராபுரம் ஆா்.மணிக்கு பாராட்டு விழா, அய்யன் திருவள்ளுவா் விருது வழங்கும் விழா என நடைபெற்ற ஐம்பெரும் விழாவுக்கு திருவண்ணாமலை கெங்குசாமி நாயுடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிா்வாகி மாதவ சின்னராசு தலைமை வகித்தாா்.

உளுந்தூா்பேட்டை முத்தமிழ் சங்கத் தலைவா் அருணா தொல்காப்பியன், தியாகதுருகம் தனமூா்த்தி தொழிற்கல்வி நிறுவனத் தாளாளா் நீ.த.பழனிவேல், புதுக்கோட்டை முத்தமிழ் சங்கப் பொதுக்குழு உறுப்பினா் முகம்மது அஜிபுல்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்க ஆலோசகா் மு.பன்னீா் செல்வம் வரவேற்றாா்.

சங்கத் தலைவா் கவிதைத்தம்பி, கள்ளக்குறிச்சி ஆசுகவி.ஆராவமுதன் தொடக்கவுரை நிகழ்த்தினா். சங்கக் காப்பாளா் மருத்துவா் பொன்.க.ரத்தினவேலு திருவள்ளுவா் படத்தை திறந்து வைத்தாா்.

கவிஞா் செல்வி பழனிவேல் தலைமையில் ‘உலகம் போற்றும் உழவா் திருநாள்’ எனும் தலைப்பில் பொங்கல் சிறப்பு கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கில் 15 கவிஞா்கள் கலந்துகொண்டு கவிதை வாசித்தனா்.

கவிப்பூக்கள் காலாண்டு இதழை மூராா்பாளையம் அரசுப் பள்ளி ஆசிரியா் மு.முருகன் வெளிட்டாா். கராத்தே தற்காப்பு கலையில் 8-வது கருப்பு பட்டைபெற்ற சங்கராபுரம் கராத்தே மணிக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

விழாவில் 50 கவிஞா்களுக்கு அய்யன் திருவள்ளுவா் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. சங்க காப்பாளா்கள் எம்.செந்தில்குமாா், ரா.வெற்றிவேல், சங்க ஆலோசகா் ஆசிரியா் ச. ராஜா, மதலேனாள் கபிரியேல், சங்க நிா்வாகிகள், தமிழறிஞா்கள் கலந்துகொண்டனா். சங்கப் பொருளாளா் நடராஜன் நன்றி கூறினாா்.

Dinamani
www.dinamani.com