மூத்த தமிழறிஞர் இரா.திருமுருகன் மறைவு

புதுச்சேரி, ஜூன் 3: புதுச்சேரியைச் சேர்ந்த முனைவர் இரா. திருமுருகன் (81) (படம்) உடல் ஜிப்மர் மருத்துவமனைக்கு புதன்கிழமை தானமாக வழங்கப்பட்டது.  புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் வசித்து வ

புதுச்சேரி, ஜூன் 3: புதுச்சேரியைச் சேர்ந்த முனைவர் இரா. திருமுருகன் (81) (படம்) உடல் ஜிப்மர் மருத்துவமனைக்கு புதன்கிழமை தானமாக வழங்கப்பட்டது.

 புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் வசித்து வந்த மூத்த தமிழறிஞர் முனைவர் இரா. திருமுருகன் ஜூன் 3-ம் தேதி அதிகாலை மாரடைப்பால் காலமானார்.

 அவருக்கு மனைவி யமுனா, புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனத்தில் ஆராய்ச்சி உதவியாளராகப் பணியாற்றும் தி.அறவாழி ஆகியோர் உள்ளனர்.

 திருமுருகன் தமிழ் இலக்கணத்திலும், தமிழிசையிலும் வல்லுநர். சிந்துப் பாடல்களின் யாப்பிலக்கணம் என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். 55 நூல்கள் வெளியிட்டுள்ளார்.

 தமிழ் வளர்ச்சிக்காக பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்.

 புதுச்சேரியில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அச் சட்டத்தின் அடிப்படையில் அரசு ஊழியர்கள் தமிழில் கையெழுத்துப் போட வேண்டும். ஒரு மாதத்துக்குள் இதை செய்யவில்லையென்றால் தமிழ்மாமணி விருதைத் திருப்பிக் கொடுப்பதாக அறிவித்திருந்தார். அரசு செய்யாமல் இருந்ததால் அவர் வீட்டிலிருந்து ஊர்வலமாகச் சென்று கலை பண்பாட்டுத்துறை அதிகாரியிடம் தமிழ்மாமணி உயரிய விருதைத் திருப்பிக் கொடுத்தவர் திருமுருகன்.

 திருமுருகனின் விருப்பத்துக்கு ஏற்ப அவரது உடல் ஜிப்மர் மருத்துவமனைக்கு புதன்கிழமை தானமாக வழங்கப்பட்டது. முன்னதாக அந்த மருத்துவமனையின் டாக்டர்கள் வந்து கண்களைத் தானமாகப் பெற்றுச் சென்றனர்.

 புதுச்சேரி உள்துறை அமைச்சர் இ. வல்சராஜ், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முன்னாள் எம்.பி. பேராசிரியர் மு.ராமதாஸ், எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள், தமிழர்கள் திரண்டு திருமுருகன் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com