காரைக்கால் மாவட்டத்தில் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அமலாக்கம் எப்போது?

காரைக்கால், செப். 14: புதுவை அரசு அறிவித்த காரைக்கால் மக்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும் என்று இந்த மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர். சுமார் 2.5 லட்சம் மக்கள்த
Updated on
2 min read

காரைக்கால், செப். 14: புதுவை அரசு அறிவித்த காரைக்கால் மக்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும் என்று இந்த மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சுமார் 2.5 லட்சம் மக்கள்தொகையை நெருங்கிவிட்ட காரைக்காலில் 500 படுக்கைகள் கொண்ட ஒரே ஓர் அரசு பொது மருத்துவமனை மட்டுமே உள்ளது. இங்கு சில சிறப்பு வசதிகளே இருந்தாலும், அதையும் இயக்குவதற்குரிய ஆள்கள் நியமிக்கப்படாமல் உள்ளதாக பரவலான புகார் உள்ளது.

மேலும், இருதய அவசர பரிசோதனை, சிகிச்சை, சிறுநீரகம் பாதிக்கப்பட்டோருக்கான ரத்த சுத்திகரிப்பு வசதி, விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சிகிச்சை வசதி உள்ளிட்ட வசதிகள் இந்த மருத்துவமனையில் இல்லை. புதுச்சேரியிலிருந்து இந்தத் துறைகளுக்கான மருத்துவ நிபுணர்களை அனுப்பிவைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், இருதய பாதிப்பு, விபத்து, தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மருத்துவமனைக்கு வந்தால், தஞ்சை, புதுச்சேரிக்கு சென்றுவிடுங்கள் என மருத்துவ நிர்வாகம் தரப்பில் கூறப்படுவது வாடிக்கையாக உள்ளது. இதற்கு மாற்றாக, தனியார் மருத்துவமனைக்குச் செல்லலாம் என்றால் போதிய மருத்துவமனைகளும், மருத்துவ வசதிகளும் காரைக்காலில் இல்லை.

காரைக்கால் மக்களுக்கான இந்த பிரச்னைகள் அனைத்தும் தீர சிறப்பு சிகிச்சை வசதிகள், 600 படுக்கைகள் கொண்ட நவீன மருத்துவமனை கட்டி, சிறப்பு நிபுணர்களை அங்கு பணியமர்த்த வேண்டும். இதுகுறித்து அரசு பரிசீலனை செய்துவந்தாலும், தற்போதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், வெளியூர்களில் உயரிய சிகிச்சை பெற ஏழை, நடுத்தரப் பிரிவு மக்களால் இயலாத நிலையில், நோயாளிகள் இறக்க நேரிடும் சூழ்நிலை நிலவி வருகிறது.

இதற்கெல்லாம் தீர்வாக, தமிழகத்தில் உள்ளதுபோல, காரைக்கால் மாவட்டத்திலும் உடனடியாக மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட மக்கள் வலியுறுத்துகின்றனர்.

முன்னதாக, புதுவை மாநிலத்தில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்படும்; இந்தத் திட்டம் முதல் கட்டமாக காரைக்கால் மாவட்டத்தில் அமல்படுத்தப்படும் என்று மாநில சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவசக் காப்பீடும், 2-வது கட்டமாக நடுத்தர வருவாய்ப் பிரிவு மக்களுக்கு ஆண்டுக்கு ரூ. 963 பிரீமியத் தொகையையாய் பெற்று காப்பீடு வழங்க, ஒரு காப்பீடு நிறுவனத்துடன் புதுவை அரசு பேச்சுவார்த்தை நடத்தி, அதற்காக புதுவை அரசு ரூ. 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், இதுவரையில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படவில்லை.

அண்டை மாநிலமான தமிழக மக்கள் கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பயனை பெருநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெறும்போது, அடுத்த படுக்கையில் உள்ள காரைக்காலைச் சேர்ந்த ஏழை நோயாளி பல லட்சம் ரூபாயை சொந்தமாகச் செலவு செய்ய முடியாமல், கந்து வட்டிக்கு பணம் வாங்கி மருத்துவச் செலவை செய்ய வேண்டிய நிலையே உள்ளது.

“புதுவை அரசு அறிவித்த காரைக்கால் மக்களுக்கான காப்பீட்டுத் திட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் கக்கன் பெயரைச் சூட்டி, அக்டோபர் 9-ம் தேதி புதுச்சேரிக்கு சோனியா காந்தி வரும்போது, இந்தத் திட்டத்தை தொடக்கிவைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று புதுவை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் அண்மையில் வலியுறுத்தி இருந்தார்.

காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை மக்கள் உயரிய சிகிச்சையை இலவசமாகப் பெற, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் விரைந்து அமல்படுத்த வேண்டும்; இதைத்தொடர்ந்து, 2-வது கட்டமாக நடுத்தர வருவாய்ப் பிரிவு மக்கள் பிரீமியம் செலுத்தி காப்பீடு பெறும் வசதியை புதுவை அரசு செயல்படுத்த வேண்டும் என்பதே காரைக்கால் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com