காரைக்கால், பிப். 6: காரைக்காலில் உள்ள புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தால் (பிஆர்டிசி) மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதனால், இதை மேம்படுத்த புதுவை அரசு முன்வர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் காரைக்கால் மக்கள்.
புதுவை யூனியன் பிரதேசத்தில் தனியார் மட்டுமே பேருந்துகளை இயக்கி லாபம் ஈட்டி வந்த நிலையில், தமிழகத்தைப் போல, புதுவையிலும் அரசு சார்பில் போக்குவரத்துக் கழகம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகம் (பி.ஆர்.டி.சி.) எனப் பெயரிடப்பட்டு, காரைக்காலில் தனி அலுவலகமும், பணிமனையும் உள்ளன. காரைக்காலில் இருந்து திருப்பதி போன்ற வெளி மாநில நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கிய காலம் மாறி, தற்போது சென்னை, கோவை, புதுச்சேரி மற்றும் உள்ளூரில் இயக்கும் வகையில் 18 பேருந்துகளே உள்ளன. ஆனால், இந்த 18 பேருந்துகளும் பராமரிப்பே இல்லாமல் இயக்கப்படுவதால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பணிமனையின் நிலை: காரைக்காலில் உள்ள பி.ஆர்.டி.சி. பணிமனை திறந்தவெளியாகவும், உள்சாலை, தரைத்தளம் இல்லாமல், பேருந்துகளை நிறுத்தி பழுது நீக்கும் கொட்டகை வசதியில்லாமல் உள்ளது. மேலும், இங்கு பேருந்துகளுக்குத் தேவையான உதிரிப் பாகங்கள் எதுவும் இல்லையாம். அதனால், கூடுதல் விலை கொடுத்து உதிரிப் பாகங்கள் வாங்க கும்பகோணம் செல்லும் நிலையே உள்ளதாம்.
92 ஓட்டுநர், நடத்துநர் உள்ள காரைக்கால் பணிமனையில் இடிந்து போன கட்டடத்தின் மேல் கீற்றுக் கொட்டகை அமைத்து இவர்களுக்கு ஓய்வறை தரப்பட்டுள்ளதாம். பேருந்தை எப்.சி. பார்க்க வேண்டி சீரமைப்பு செய்ய வேண்டுமெனில், பெயிண்டர் இல்லை, டிங்கெரிங் வேலை, தச்சுப் பணியாளர் என யாருமே இல்லையாம். அதனால், கடமைக்கு பேருந்தில் பெயிண்ட் தடவி, எப்.சி. காட்டி பேருந்தை இயக்குவதும், அடுத்த ஓரிரு நாளில் அது பழுதாகி பணிமனையில் நிற்பதும் தொடர்கிறதாம்.
பேருந்தில் ஏற்படும் பழுதை பணிமனை குறிப்பேட்டில் ஓட்டுநர்கள் எழுதி வைத்தால், மாதக் கணக்கானாலும் அவற்றைச் சீரமைப்பதில்லையாம். அலுவலக மேலாளர் வாரத்துக்கு 2 நாள் மட்டுமே காரைக்காலில் இருப்பதாகவும். மற்ற நாள்கள் புதுச்சேரிக்கு சென்றுவிடுவதாகவும் கூறப்படுகிறது.
எந்தப் பேருந்தும் முறையாகப் பராமரிக்கப்படாததால், மற்ற நகரங்களுக்கு முன்பதிவு செய்துவிட்டு செல்வோர்கூட, உள்ளூர் நகரப் பேருந்தில் செல்வதைப் போன்ற சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
மேலும், ஒரு பேருந்து பழுதானால், பயணிகளை மாற்றுப் பேருந்தில் ஏற்றி விடும் வழக்கம் இங்கு இல்லை. காரணம், காரைக்காலில் மாற்றுப் பேருந்து என்று எதுவும் இல்லை. இதனால், வழியில் பழுதானால் (நள்ளிரவு நேரத்தில்கூட) பயணிகள் தாமாக வேறு பேருந்தை நிறுத்தி ஏறிக் கொள்ள வேண்டும். கட்டணத்தையும் திருப்பித் தருவது இல்லையாம்.
புதிய பேருந்துகள் தர மறுப்பு: மத்திய அரசின் ஜேஎன்என்ஆர்எம் திட்டத்தின் கீழ், புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகம் 26 தாழ் தளப் பேருந்தை வாங்கி புதுச்சேரியிலேயே இயக்குகிறதாம். ஆனால், இதில் ஒன்றைக்கூட காரைக்காலுக்கு தரவில்லை. இதுகுறித்து காரைக்கால் பகுதியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் யாரும் அரசிடம் கேள்வி எழுப்பவில்லை என்பது காரைக்கால் மக்களின் புகார்.
மழைக் காலத்தில் பேருந்தில் நீர் கசிவதும், ஜன்னல் கண்ணாடி இல்லாமலும், இருக்கைகள் சேதம் என்ற நிலையிலும், கடந்த 7 ஆண்டுகளாக புதியப் பேருந்துகள் வாங்காமலேயே பிஆர்டிசி காரைக்கால் நிர்வாகம் செயல்படுகிறதாம்.
ஊழியர் பிரச்னை: இங்குள்ள ஊழியர்களுக்கு பதவி உயர்வு இல்லை, சீருடை வழங்கப்படுவதில்லை. தொழிலாளர்கள் தங்களது சங்கத்தின் தகவல் பலகையில் இதுவரை மற்ற பெரிய நகரங்களுக்குச் செல்ல வேண்டிய பேருந்துகள் நிறுத்தப்பட்டதால், போக்குவரத்துக் கழகத்துக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து விரிவாக எழுதி வைத்துள்ளனர்.
புதிய பேருந்துகளை வாங்கவோ, பழுதைச் சீரமைக்கவோ, பணிமனைகளைச் சீரமைப்பதிலோ புதுவை அரசு கவனம் செலுத்தவில்லை எனவும், காரைக்கால் பிஆர்டிசி நிர்வாகத்தால் அரசுக்கு லாபமும் இல்லை, மக்களுக்கு பயனும் இல்லை என்றும் குறிப்பிட்டார் பிஆர்டிசி ஊழியர்கள் சங்கப் பொறுப்பாளர் ஜி. சுப்புராஜ்.
வாரியத் தலைவர் விளக்கம்:
இதுகுறித்து நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், பிஆர்டிசி வாரியத் தலைவருமான அ. மாரிமுத்து கூறியது:
காரைக்காலில் பேருந்துகள் பற்றாக்குறை உள்ளதும், பணிமனையை சீரமைக்க வேண்டியதும் உண்மைதான். புதுச்சேரியில் இயங்கி கொண்டிருக்கும் தாழ்தளப் பேருந்துகள் புதுச்சேரிக்கென தரப்பட்டவை. மேலும், புதுவைக்கு 14 புதிய பேருந்துகள் வாங்கப்படவுள்ளன. இதில் ஓரிரு பேருந்துகளை காரைக்காலுக்கு தரும்படி முதல்வர், போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் பேசி வருகிறேன்.
மேலும், காரைக்காலில் உள்ள பணிமனையை சீரமைக்கவும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இதுதவிர, பணிமனையை வேறு இடத்துக்கு மாற்றும் திட்டமும் உள்ளது. வாரியத் தலைவர் பொறுப்பு ஏற்றது முதல் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன என்றார் அவர். காரைக்காலில் அரசின் பேருந்து சேவையை விரிவுபடுத்தும் வகையில் புதிய பேருந்துகள் வாங்க வேண்டும், பணிமனையை நவீனத் தரத்துடன் மாற்றி, கிராமப்புற மக்களுக்கு பயனுள்ள வகையிலும் இக் கழகத்தை மாற்ற வேண்டும் என்பதே காரைக்கால் மக்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.