புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் நீட் தேர்வு இலவச பயிற்சியில் அனைத்துத் தரப்பு மாணவர்களும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதற்கு, கல்வித்துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல் மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி மாநில கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு இலவசமாக நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கும் சூழல் உருவாக்கப்பட்டது. பிளஸ் 2 தேர்வு எழுதிய, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் சுமார் 120 பேருக்கு 60 பேர் வீதம் 2 வகுப்பறைகளில் இலவச பயிற்சி அளிக்கப்பட்டது. பாட வாரியாக தகுதியான கல்வி வல்லுநர்களை வரவழைத்து, தகுந்த ஊதியம் தரப்பட்டு பயிற்சி தரப்பட்டது. மாணவர்களுக்கு மதிய உணவு, நீட் தேர்வுக்கான வழிகாட்டல் கையேடுகளும் இலவசமாக தரப்பட்டன.
இந்த பயிற்சியில் பங்கேற்று நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் 120 பேரில் 17 பேர் சிறந்த மதிப்பெண் எடுத்து தேர்வாகியிருந்தார்கள். பலர் மருத்துவக் கல்வியில் சேர்ந்துவிட்டனர்.
ஓராண்டு இடைவெளியில், புதுச்சேரி மாநில பள்ளிக் கல்வித் துறையானது 2018 -ஆம் ஆண்டு பயிற்சியை முறையாக நடத்தும் வகையில் திட்டமிட்டு ஈடுபட வேண்டும் என கல்வியாளர்கள், பெற்றோர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் காரைக்காலில் மட்டும் 2,663 மாணவ, மாணவியர் தேர்வு எழுதியுள்ளனர். இவர்கள் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளிகளைச் சேர்ந்தவர்களாவர். இவர்களில் பெரும்பான்மையினருக்கு மருத்துவக் கல்வி மீதான எண்ணம் இருக்க வாய்ப்புண்டு.
மாணவர்கள் ஆர்வத்தையும், அரசு நிர்வாகத்தின் பாராமுகத்தையும் பயன்படுத்திக்கொண்ட பல்வேறு தனியார் பயிற்சி நிறுவனங்கள், காரைக்காலில் பயிற்சி மையங்களை அமைக்கத் தொடங்கிவிட்டன.
புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மட்டும் வாய்ப்பு என்ற அறிவிப்பு செய்து, கடந்த 4 -ஆம் தேதி முதல் காரைக்கால் கோயில்பத்து தந்தை பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நீட் இலவச பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 120 பேர் படித்ததில், நிகழாண்டு பயிற்சியில் இதுவரை 47 பேர் மட்டுமே சேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களாவர்.
அரசு உதவிப் பெறும் பள்ளியோ, தனியார் பள்ளி மாணவர்களையோ இந்த பயிற்சியில் சேர்க்க கல்வித்துறை வாய்ப்பு தரவில்லை. அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் ஏழை, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்களும் படிக்கிறார்கள். எனவே, தனியாரிடம் பெரும் தொகை செலுத்தி சேர வாய்ப்பில்லை. தங்களுக்கும் அரசுத் தரப்பு பயிற்சி மையத்தில் வாய்ப்புத் தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருவதை கல்வித்துறை இதுவரை ஏற்கவில்லை.
வாய்ப்புகளைப் பயன்படுத்தி காரைக்காலில் ஆங்காங்கே தொடங்கப்பட்ட நீட் தனியார் பயிற்சி மையத்தில் சுமார் 25 நாள்கள் பயிற்சிக்கு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இது தனியார் பள்ளியில் படிக்கும் சிலருக்கும், சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கும் வேண்டுமானால் சாதகமாக இருக்கலாம். அரசு உதவிப் பெறும் பள்ளியில் பயிலும் பல்வேறு தரப்பு மாணவர்களால் இங்கு செல்ல முடியவில்லை என வேதனை தெரிவிக்கப்படுகிறது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் பாடநூல்களை அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவர்களும் பெறுகிறார்கள். பிற சலுகைகளும் அரசுப் பள்ளிகளைப்போலவே பெறும்போது, தங்களுக்கு மட்டும் அரசு நடத்தும் இலவச நீட் பயிற்சியில் வாய்ப்பு மறுக்கப்படுவது நியாயமற்ற செயல் என மாணவர்கள், பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது.
வரும் மே மாதம் 5 -ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ள சூழலில், அரசு நடத்தும் நீட் தேர்வுக்கான பயிற்சியில் தகுதியான மாணவர்கள் சேருவதற்கு புதுச்சேரி அரசின் கல்வித்துறை உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பெற்றோர் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட அரசு உதவிப் பெறும் பள்ளி பெற்றோர் சங்கத் தலைவர் அ.வின்சென்ட், செயலர் மணவாளன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை கூறியது :
அரசு உதவிப் பெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்களுக்கு அரசு நீட் தேர்வு பயிற்சி மையத்தில் இடமில்லை எனக் கூறுவது அர்த்தமற்றது. தமிழகத்தில் அரசுப் பள்ளி சலுகைகள் அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கும் கிடைக்கிறது. ஆனால், புதுச்சேரியில் பாடநூல்கள் மட்டும் கிடைக்கின்றன. மற்றவை திருப்திகரமாக இல்லை. ஆசிரியர்களுக்கு ஊதிய நிலுவை இருக்கிறது. காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. எனவே, இந்த பள்ளி மாணவர்களுக்காவது அரசுப் பயிற்சி மையத்தில் வாய்ப்புத் தர வேண்டியது அவசியம். மாணவர்களை கல்வித்துறையே தரம் பிரிப்பது ஏற்புடையதல்ல. உடனடியாக மையத்தில் 100 மாணவர்களுக்கு மிகுதியாக பயிற்சியில் பங்குபெறக்கூடிய சூழலை கல்வித்துறை உருவாக்க வேண்டும் என்றனர்.
புதுச்சேரி மாநில கல்வித்துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உடனடியாகத் தகுதியான மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தகுதியான கல்வியாளர்களை மையத்துக்கு வரவழைக்கவும், மாணவர்களுக்கு பயிற்சி ஏடுகள் இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலோ கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
2019-ஆம் ஆண்டு இந்த மையங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்ற திட்டத்தை இப்போதே எடுத்து, செயல்வடிவம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு எடுக்காமல்போனால், காரைக்காலில் வீதிக்கு வீதி தனியார் பயிற்சி மையங்கள் உருவாகிவிடும். அதற்கு அரசே துணை
நின்றதாகிவிடும் என்கின்றனர்
கல்வியாளர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.