உப்பளத்தில் மீன் வியாபாரிகள் சாலை மறியல்

புதுச்சேரி உப்பளத்தில் தடை செய்யப்பட்ட  இடத்தில்  மீன் விற்பனை செய்த மீனவர்களை நகராட்சி  அதிகாரிகள் கண்டித்ததால், எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

புதுச்சேரி உப்பளத்தில் தடை செய்யப்பட்ட  இடத்தில்  மீன் விற்பனை செய்த மீனவர்களை நகராட்சி  அதிகாரிகள் கண்டித்ததால், எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி உப்பளம் அம்பேத்கர் சாலையில் உள்ள துறைமுகம் அருகே மீனவர்கள் சிலர் சாலையோரத்தில் மீன் விற்பனை செய்து வருகின்றனர்.  மீன் வாங்க வரும் பொதுமக்களால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.  
 இது குறித்து பலமுறை பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆளுநர் கிரண் பேடி அந்த இடத்தை ஆய்வு செய்தார். அப்போது அவர் சாலை ஓரங்களில் கடை போடக்கூடாது என்றும், கடைகளை அப்புறப்படுத்துமாறும் உத்தரவிட்டார்.
 இதுகுறித்து மீனவ கிராம பஞ்சாயத்திடம் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. இதில் 90 சதவிகித மீனவர்கள் இங்கு கடை போடுவதை எதிர்த்துள்ளனர்.  ஆனால், ஒரு சில மீனவர்கள் மட்டுமே எதிர்ப்பை மீறி கடைபோட்டு வந்துள்ளனர். 
கடந்த 2 நாள்களாக துறைமுகப் பகுதியில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற்று
வரும் நிலையில், மீனவர்களின் கடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
 இதனையடுத்து நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒதியஞ்சாலை காவலர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை  மீனவர்களை கடைகளை அகற்ற அறிவுறுத்தினர்.  
ஆனால், மீனவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்களுக்கு துறைமுகத்திற்குள் கடை போட இடம் ஒதுக்கித் தரவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
 அதற்கு அதிகாரிகள் துறைமுகத்தில் கடை போட இடம் தரமுடியாது. வேறு இடத்தில் இடம் பார்த்துத் தருவதாக கூறினர்.  ஆனால், மீனவர்கள் இதை ஏற்க மறுத்து அதிகாரிகள்,  காவலர்களிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 மேலும், சாலைகளை மறித்து மறியலிலும் ஈடுபட்டனர்.  இதனால் அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்பட்டது.  
ஆயினும், ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் விற்பனை செய்து கொள்வதாக கூறி மீண்டும் மீனவர்கள் தங்களது வியாபாரத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com