புதுவை அரசு அச்சகத்தில் அரசாணைகளைக் கொண்ட காப்பகப் பிரிவைத் தொடங்க வேண்டும்

புதுவை அரசு அச்சகத்தில் பல்வேறு அரசாணைகளைக் கொண்ட காப்பகப் பிரிவைத் தொடங்க வேண்டும் என புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார்.

புதுவை அரசு அச்சகத்தில் பல்வேறு அரசாணைகளைக் கொண்ட காப்பகப் பிரிவைத் தொடங்க வேண்டும் என புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார்.
புதுவை ஆளுநர் கிரண் பேடி, தட்டாஞ்சாவடியில் உள்ள புதுவை அரசு அச்சகம் என்றழைக்கப்படும் எழுது பொருள் - அச்சிடுதல் துறை இயக்குநர் அலுவலகத்தை வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின் அவர் வெளியிட்ட அறிக்கை:
மிகவும் பழைமையானதாக விளங்கும் புதுவை அரசு அச்சகம் பிரெஞ்சு அரசாங்கத்தால் 1817 -ஆம் தொடங்கப்பட்டது. தற்போது இங்கு, 416 பேர் பணியாற்றி வருகின்றனர். நிகழாண்டு நிதிநிலை அறிக்கையில் அச்சகத்துக்கு ரூ. 28 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
இங்கு, அரசின் இலவச நோட்டுப் புத்தகங்கள், பதிவேடுகள், விண்ணப்பங்களைத் தயாரிப்பதுடன், அரசுத் துறைகளுக்குத் தேவைப்படும் எழுது பொருள்களையும் வழங்கி வருகிறது. இங்கு கல்வி, சுகாதாரம், கணக்கெடுப்புத் துறைகளுக்கு அதிகளவில் அச்சிடும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அச்சகத்தின் ஆண்டுப் பணி அறிக்கையை இணையதளத்தில் வெளியிட வேண்டும். மேலும், வாரச் செயல்திறனையும் தெரிவிக்க வேண்டும். இதனுடன் அரசு அச்சகத்தை மெய்நிகர் பயணம் (விர்ச்சுவல்) செய்வது போன்ற விடியோவை இணையத்தில் பதிவேற்ற வேண்டும்.  
வரலாறு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக பிரெஞ்சு காலத்தில் முதன்முதலில் வெளியிடப்பட்ட அரசாணைகள், இதுவரை அச்சிடப்பட்ட அரசாணைகள் கொண்ட காப்பகப் பிரிவைத் தொடங்க வேண்டும்.
துறையானது திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். தகவல் தொழில்நுட்பம் கிடைக்க தேசிய தகவல் மையத்துடன் இணைப்பு ஏற்படுத்தி, துறையை நவீன மயமாக்குவதற்கான திட்டத்தைத் தயாரித்து, அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். 
அச்சகத் துறை எப்படி பணியாற்றுகின்றது என்பதை மூன்றாம் நபரைக் கொண்டு மதிப்பீடு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ஆளுநர் கிரண் பேடி உயர்கல்வி - தொழில்நுட்பக் கல்வித் துறையையும் ஆய்வு  செய்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com