புதுவை: என்.ஆர்.காங்கிரஸுக்கு தோல்வி ஏன்?

புதுவை மக்களவைத் தொகுதி தேர்தல், தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்
Updated on
1 min read

புதுவை மக்களவைத் தொகுதி தேர்தல், தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தோல்வியடைந்தது. தேர்தலில் சரியான முறையில் வியூகம் அமைக்காததே தோல்விக்குக் காரணம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
புதுவையில் காங்கிரஸ் முதல்வராக இருந்த ரங்கசாமி அந்தக் கட்சியில் இருந்து வெளியேறி, கடந்த 2011-இல் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய 2 மாதங்களிலேயே ஆட்சியை பிடித்தார்.
புதுவையில் மாநிலக் கட்சிகளால் பெரிய அளவில் வேரூன்ற முடியாத நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் தொடர்ந்து மக்களிடம் செல்வாக்கு பெற்றது. புதுவைக்கு மாநில அந்தஸ்து என்ற கோரிக்கையுடன் கட்சியைத் தொடங்கிய ரங்கசாமி, பாஜகவுடன் கூட்டணியில் இருந்த போது 2 ஆண்டுகளாக அதுகுறித்து குரல் கொடுக்கவில்லை என்ற ஆதங்கம் மக்களிடம் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக உள்ள என்.ஆர்.காங்கிரஸ், அரசின் தவறுகளைச் சுட்டிக் காட்டி, பெரிய அளவில் போராட்டம் எதையும் நடத்தவில்லை.
மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளுக்கு என்.ஆர்.காங்கிரஸ் குரல் கொடுக்காமல் மெளனமாகவே இருந்தது என்ற ஆதங்கமும் மக்களிடம் பரவலாக இருந்து வருகிறது.
ஏற்கெனவே கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை இழந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு மக்களவைத் தேர்தல் தோல்வி மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ரங்கசாமியின் கோட்டையாகக் கருதப்படும் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் திமுகவிடம் அந்தத் தொகுதியைப் பறிகொடுத்தது என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு அதிக செல்வாக்குள்ள கிராமப்புறத் தொகுதிகளிலும் மக்களவைத் தேர்தலில் மிகப் பெரிய வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வாக்குகளைப் பெற்றது. இது அந்தக் கட்சிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, என்.ஆர்.காங்கிரஸுக்கு செல்வாக்கான மண்ணாடிப்பட்டு, மங்களம், நெடுங்காடு, திருபுவனை,  உழவர்கரை உள்ளிட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் அதிகளவில் வாக்குகளைப் பெற்றது.
புதுவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தொல்லை கொடுத்து வந்த நிலையில், அதையே தனக்குச் சாதகமாக்கி, காங்கிரஸ் கட்சி பிரசாரம் செய்தது.
ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிர்ப்பு அலை இருந்த நிலையில், புதுவைக்கு மாநில அந்தஸ்து என்ற காங்கிரஸின் பிரசாரம் அந்தக் கட்சியின் வெற்றிக்கு கைகொடுத்தது.
பிரசாரத்தில் நரேந்திர மோடியின் படத்தைப் பயன்படுத்தி வாக்குச் சேகரிக்க முடியாத அளவுக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி கொடுத்தது காங்கிரஸ் கட்சி. இந்த வியூகமும் காங்கிரஸ் கட்சிக்கு கைகொடுத்தது.
காங்கிரஸ் கட்சிக்கு மாநில, மாவட்ட, தொகுதிகள் அளவில் நிர்வாகிகள் இருக்கும் நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு மாநில அளவில் சிலரைத் தவிர மாவட்ட, தொகுதிகள் அளவில் நிர்வாகிகள் இல்லை. கட்சி தொடங்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை கட்சி நிர்வாகிகளைத் தேர்வு செய்யாமல் உள்கட்சி ஜனநாயகமின்றி இயங்குவது தேர்தல் அரசியலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
ஏற்கெனவே சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, மக்களவைத் தேர்தலிலும் தொடர்வதால் என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com