தேர்தலுக்குப் பிறகு புதுவையில் ஆட்சி மாற்றம் உறுதி: என்.ரங்கசாமி
By DIN | Published On : 01st April 2019 09:57 AM | Last Updated : 01st April 2019 09:57 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு புதுவையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்று எதிர்க்கட்சித் தலைவர் என்.ரங்கசாமி தெரிவித்தார்.
புதுவை மக்களவைத் தொகுதியில் பாஜக, அதிமுக கூட்டணியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் கே.நாராயணசாமியை ஆதரித்து அந்தக் கட்சித் தலைவர் ரங்கசாமி கணபதி செட்டிக்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தை தொடங்கினார். அப்போது, அவர் பேசியதாவது:
புதுவையில் எனது ஆட்சியின் போது நிர்வாகம் சீர்குலைக்கப்பட்டதாக முதல்வர் நாராயணசாமி கூறி வருகிறார். ஆனால், உண்மையில் ஆட்சி நிர்வாகத்தைச் சீர்குலைத்தது அவர்தான்.
எங்களது ஆட்சியில் மேம்பாலம், இணைப்புச் சாலை, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, படுகை அணைகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. நெசவாளர்கள், மீனவர்கள், முதியோர்கள், தாழ்த்தப்பட்டோர்களுக்கான திட்டங்களை நிறைவேற்றினோம். கல்லூரி மாணவர்களுக்கு கட்டண நிதியுதவி அளித்தோம்.
ஆனால், தற்போது ஆளுநருடன் மோதல் போக்கை கடைப்பிடித்து, எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றாமல் குறைகூறி வருகின்றனர்.
என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் கோடீஸ்வரர் என்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். அப்படியெனில், காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் என்ன ஏழை வேட்பாளரா?
மாநிலங்களவை உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தவர் முதல்வர் நாராயணசாமி. அவர், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டிருக்கலாமே? அவர் போட்டியிட மாட்டார். ஏனென்றால் முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும். அதனால் வைத்திலிங்கத்தை நிறுத்தியுள்ளனர்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கருத்துப் பரிமாற்றம் ஜெயலலிதாவிடம் சென்று சேராததால்தான் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடியவில்லை. அப்போதுகூட அன்பு மிகுதியால்தான் ஜெயலலிதா என்னைக் கடிந்து கொண்டார்.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு புதுவையில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். ஆட்சி மாற்றத்துக்கான அடித்தளம்தான் இந்தத் தேர்தல் என்றார் அவர்.
பிரசாரத்தின் போது, மாநில அதிமுக செயலர் புருஷோத்தமன், புதுவை சட்டப்பேரவை அதிமுக உறுப்பினர்கள் குழுத் தலைவர் ஆ.அன்பழகன், மாநிலங்களவை உறுப்பினர் கோகுலகிருஷ்ணன், மாநில பாஜக தலைவர் வி.சாமிநாதன் எம்எல்ஏ உள்ளிட்டோர் உடன் சென்றனர்.