பிரசாரக் கூட்டம் நடத்தும் இடங்களை கண்டறிய ஆலோசனை
By DIN | Published On : 01st April 2019 09:57 AM | Last Updated : 01st April 2019 09:57 AM | அ+அ அ- |

அரசியல் கட்சிகள் பிரசார பொதுக் கூட்டம் நடத்தும் இடங்களை கண்டறிய ஆலோசனை வழங்கப்பட்டது. இதுதொடர்பான கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுவை மக்களவைத் தொகுதி தேர்தல், தட்டாஞ்சாவடி இடைத் தேர்தல் ஆகியவை வருகிற ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெறுகிறது.
தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த மாவட்ட தேர்தல் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, அரசியல் கட்சிகள் பொதுமக்களுக்கு சிரமமில்லாத வகையில் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தை நடத்தும் இடங்களைக் கண்டறியும் பொருட்டு, மாவட்ட துணை தேர்தல் நடத்தும் அதிகாரி சக்திவேல் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் அரசியல் கட்சியினர், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள், அனைத்துப் பகுதி காவல் கண்காணிப்பாளர்கள், வருவாய்த் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், பல முக்கிய அம்சங்களைக் கருத்தில் கொண்டு பொதுக் கூட்டம் நடத்தும் இடங்கள் தொகுதி வாரியாகக் கண்டறியப்பட்டன.
முக்கிய அம்சமாக சட்டம் - ஒழுங்கு பிரச்னை, போக்குவரத்து இடையூறுகளைத் தவிர்த்தல் போன்றவை கருத்தில் கொள்ளப்பட்டன.
மாணவர்கள் தேர்வு எழுதும் காலம் என்பதால், பள்ளிகள் அருகில் பொதுக் கூட்டங்களை நடத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...