போலீஸார் பாரபட்சமின்றி பணியாற்ற அறிவுறுத்தல்
By DIN | Published On : 01st April 2019 09:55 AM | Last Updated : 01st April 2019 09:55 AM | அ+அ அ- |

தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார் கட்சி பாகுபாடின்றி நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என தெற்கு பகுதி காவல் கண்காணிப்பாளர் அப்துல் ரஹீம் தெரிவித்தார்.
புதுச்சேரி தெற்கு பகுதி காவல் நிலையத்துக்கு உள்பட்ட போலீஸ் அதிகாரிகள், போலீஸாருக்கான ஆலோசனைக் கூட்டம் பாகூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் தெற்குப் பகுதி போலீஸ் எஸ்.பி. அப்துல் ரஹீம் தலைமை வகித்துப் பேசியதாவது:
சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் பகுதிகளில் போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். தேர்தலின் போது எந்த ஒரு அரசியல் கட்சியினருக்கும் ஆதரவாக நடந்து கொள்ளக் கூடாது. தேர்தல் பிரச்னை தொடர்பான வழக்குகளை பதிவு செய்ய பாரபட்சம் காட்டக் கூடாது.
விதிமுறைகளை மீறி தேர்தல் பிரசாரம் செய்பவர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனுமதி பெறாமல் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தும் வாகனங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும்.
வாக்குப் பதிவு முடியும் வரை போலீஸார் பாதுகாப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும்.
வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டருக்குள் கும்பல் சேர விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்தந்தக் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் சுவர் விளம்பரங்கள், பதாகைகள், கொடிகள், கம்பங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டு உள்ளதா என்பதை ரோந்து பணி செல்லும் போலீஸார், அதிகாரிகளிடம் கூற வேண்டும்.
அரசியல் கட்சிகளிடம் எவ்வித பாகுபாடும் இல்லாமல் நடுநிலையுடன் பணியை மேற்கொள்ள வேண்டும்.
தேர்தலை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்துவதில் பெரும் பங்கு காவல் துறைக்குதான் உள்ளது என்றார் அவர்.
கூட்டத்தில் காவல் ஆய்வாளர் கவுதம் சிவகணேஷ், காவல் உதவி ஆய்வாளர்கள் சிவகுமார், தன்வந்திரி, வடிவழகன், சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...