பெண்ணிடம் நூதன முறையில் ரூ.6 லட்சம் திருட்டு: திருச்சியைச் சேர்ந்த இருவர் கைது
By DIN | Published On : 11th April 2019 08:30 AM | Last Updated : 11th April 2019 08:30 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் பெண் மீது அரிப்புப் பொடியை தூவி நூதன முறையில் ரூ. 6 லட்சத்தை திருடிச் சென்ற வழக்கில் திருச்சியைச் சேர்ந்த இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
புதுச்சேரி மேட்டுப்பாளையம் சண்முகாபுரத்தைச் சேர்ந்த கட்டட ஒப்பந்ததாரர் ரங்கநாதன். இவருடைய மனைவி சாந்திமதி (51). இவர்களுக்கு பொன்னி, தாமரை என்ற இரு மகள்கள் உள்ளனர். இவர்களுடன் ரங்கநாதனின் தாயார் பார்வதியும் வசித்து வருகிறார்.
வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதற்காக சாந்திமதி, தங்களது குடும்ப நகைகளை தட்டாஞ்சாவடியில் உள்ள வங்கியில் அடமானம் வைத்து, ரூ. 6 லட்சத்தை பெற்றுக்கொண்டு, தனது மகள் பொன்னியுடன் கடந்த மார்ச் 16-ஆம் தேதி மொபெட்டில் வீட்டுக்கு வந்தார். வழியில் யாரோ ஒருவர், சாந்திமதி மீது அரிப்புப் பொடியைத் தூவியதாகக் கூறப்படுகிறது. இதனால் வீட்டுக்கு வந்த சாந்திமதி, பணப்பையை அறையின் கட்டிலில் வைத்துவிட்டு, குளிப்பதற்காக உள்ளே சென்றுவிட்டார். பொன்னி வெளியில் சென்றுவிட, மற்றொரு மகள் தாமரை, மாமியார் பார்வதியுடன் வீட்டுக்குள் இருந்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள், கட்டிலில் இருந்த ரூ. 6 லட்சம் பணத்துடன் கூடிய பணப்பையை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டனராம்.
இது குறித்து மேட்டுப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து விசாரித்தனர்.
இந்த நிலையில், மேட்டுப்பாளையம் போலீஸார் அங்குள்ள தொழில்பேட்டை பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வங்கி அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த இருவரைப் பிடித்து காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள், திருச்சி திருவெறும்பூர் நாவல்பட்டு சாலைப் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (40), கக்கன் காலனியைச் சேர்ந்த அருண் (எ) அருண்பாண்டி(22) என்பதும், இவர்கள்தான் கடந்த மாதம் சாந்திமதி வீட்டில் புகுந்து ரூ. 6 லட்சத்தை திருடிச் சென்றதும் தெரிய வந்தது.
மேலும், இவர்கள் மீது திருச்சி, சமயபுரம், பழனி, வேளாங்கண்ணி காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து இவர்களை கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து ரூ.1.40 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகின்றனர்.