மே 19 வரை கருத்துக் கணிப்புகளை வெளியிட தடை: தேர்தல் ஆணையம்
By DIN | Published On : 12th April 2019 08:14 AM | Last Updated : 12th April 2019 08:14 AM | அ+அ அ- |

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட வருகிற மே 19 -ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக புதுச்சேரி தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதுகுறித்து புதுவை மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி வி. கந்தவேலு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துதல், அத்தகைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியிடுதல் ஆகியவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மக்களவை முதல்கட்ட தேர்தல், ஆந்திரம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான தேர்தல்கள், சில மாநில, யூனியன் பிரதேசங்களுக்கான இடைத் தேர்தல்கள் ஆகியவை ஏப். 11- ஆம் தேதி நடைபெற்றன. தொடர்ந்து மே 19 -ஆம் தேதி வரை நடைபெறுகிறுது.
அந்த நேரத்தில், மக்கள் பிரதிநித்துவச் சட்டம் 1951 பிரிவு 126 ஏ (1) (2) மற்றும் 16 (1) (பி) -இன்படி ஏப். 11 காலை 7 மணி முதல் மே 19 -ஆம் தேதி வரையிலான கால கட்டத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது, அவற்றை பத்திரிகை, தொலைக்காட்சி, மின்னணு ஊடகங்களின் வாயிலாக வெளியிடுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.