மோடி மீண்டும் பிரதமராக முடியாது: புதுவை முதல்வர் பேச்சு

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக முடியாது என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி கூறினார்.

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக முடியாது என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நகரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை திறந்த ஜீப்பில் சென்று இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது:
புதுவையில் ரூ.6,550 கோடிக்குத்தான் நிதிநிலை அறிக்கையே தாக்கல் செய்யப்படுகிறது. இருந்தாலும், என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் வெளிச்சந்தையில் வாங்கிய கடனுக்கு,  வட்டியும், அசலும் சேர்த்து செலுத்தி வருகிறோம். ஆண்டுக்கு வட்டியாக ரூ.300 கோடியும், அசலாக ரூ.500 கோடியும் செலுத்தப்படுகிறது.
என்.ஆர்.காங்கிரஸ், மத்தியில் ஆட்சி செய்த பாஜக கூட்டணியில் இருந்தபோது கடனைத் தள்ளுபடி செய்யவில்லை. மாநில அந்தஸ்தும் பெறவில்லை. புதுவையில் ஆளுநருக்கு குறைந்த அதிகாரம்தான் உள்ளது.  மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் கோப்புகளுக்கு அனுமதி தர வேண்டும். ஆனால், இலவச அரிசி,  முதியோர் உதவித்தொகை, சென்டாக் நிதி, அரசு காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட அனைத்தையும் அவர் தடுத்து வருகிறார்.
எந்த ஆளுநர் அரசு அலுவலகங்களுக்கு ஆய்வுக்கு சென்றுள்ளார்?  அமைச்சர்,  முதல்வருக்குத்தான் ஆய்வு செய்ய அதிகாரம் உண்டு. 
ஆளுநர் அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்துகிறார். விதிமுறைகளை மீறியும், சட்டத்துக்கு புறம்பாகவும் அவர் இவ்வாறு செயல்படுகிறார்.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் முடிவுக்கு ஆளுநர் அனுமதி அளித்து, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தொல்லை கொடுக்கக் கூடாது.
அவரது செயல்பாடுகளைக் கண்டித்து போராட்டம் நடத்தினோம். இதையடுத்து, அரிசி வழங்க, அங்கன்வாடி, ரொட்டி பால், சொசைட்டி, அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க அனுமதி கொடுத்தார், அரசுப் பணியிடங்களை நிரப்ப ஒப்புதல் தந்தார். ஆனால், தேர்தலைக் காரணம் காட்டி தற்போது அவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மோடி மீண்டும் பிரதமரானால் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட எதுவும் கிடைக்காது. 
மக்களவைத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடையும். எனவே, மோடி மீண்டும் பிரதமராக வர முடியாது. ராகுல் காந்தி தலைமையில் மத்தியில் காங்கிரஸ் அரசு அமையும் என்றார் நாராயணசாமி.
இதைத் தொடர்ந்து,  மகளிர் காங்கிரஸார் நடத்திய இரு சக்கர வாகனப் பேரணியில் முதல்வர் நாராயணசாமி பங்கேற்று உற்சாகப்படுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com