தீ விபத்தில் வீடுகள் எரிந்து சேதம்
By DIN | Published On : 26th April 2019 07:28 AM | Last Updated : 26th April 2019 07:28 AM | அ+அ அ- |

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி சுப்பையா நகரில் வியாழக்கிழமை காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் வீடுகள் எரிந்து சேதமடைந்தன.
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட சுப்பையா நகர் 9-ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் மரியலூயிஸ் (68). இவரது மூத்த மகன் சார்லஸ் இறந்த நிலையில், அவரது மனைவி சான்தோலிக் குடும்பத்துடனும், மரியலூயிஸின் மற்றொரு மகன் மரியதாஸ் அவரது குடும்பத்துடனும் ஒரே வீட்டின் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். அந்த வீடு சிமென்ட் மற்றும் தார் ஷீட்டுகளால் ஆனது.
இந்த நிலையில், வியாழக்கிழமை அனைவரும் வேலைக்குச் சென்ற நிலையில், மரியலூயிஸ் மட்டும் வீட்டில் தனியாக இருந்தாராம். அப்போது, மின் கசிவு காரணமாக வீட்டின் மேல் பகுதியில் திடீரென
தீப்பிடித்து எரிந்தது. தீ வேகமாக வீடு முழுவதும் பரவியது.
இதையடுத்து, மரியலூயிஸ் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து சப்தமிட்டார். அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்கு தகவலளித்ததுடன், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த புதுச்சேரி தீயணைப்புப் படையினர் தீயை விரைந்து அணைத்தனர். எனினும், சார்லஸின் மனைவி சான்தோலிக்கின் ஷீட் போட்ட வீடு முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
இவரது வீட்டுக்கு அருகே உள்ள மரியதாஸின் வீடு, பிரகாஷ், ஸ்ரீதர் உள்ளிட்டோரின் 3 வீடுகள் தீ விபத்தில் சேதமடைந்தன.
இதுகுறித்து தகவலறிந்த தொகுதி எம்எல்ஏ இரா.சிவா சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு, தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அங்கு வந்த வட்டாட்சியர் ராஜேஷ் கண்ணா, கிராம வருவாய் அலுவலர் சண்முகம், உருளையன்பேட்டை போலீஸார் ஆகியோர் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.