புதுச்சேரி - விழுப்புரம் இடையே அனுமதியின்றி பேருந்துகள் இயக்கப்படுவதாக புகார்
By DIN | Published On : 26th April 2019 07:30 AM | Last Updated : 26th April 2019 07:30 AM | அ+அ அ- |

புதுச்சேரி-விழுப்புரம் இடையே அனுமதியின்றி பேருந்துகள் இயக்கப்படுவதாக புதுச்சேரி வளர்ச்சி கட்சி புகார் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சித் தலைவர் பாஸ்கர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரி- விழுப்புரம் சாலையில் உள்ள திருவாண்டார் கோயில் பேருந்து நிறுத்தத்தில் பிஆர்டிசி உள்ளிட்ட எந்தப் பேருந்துகளும் நிற்பதில்லை என்று புகார் வந்தது. இதையடுத்து, திருபுவனை போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் சென்று ஆய்வாளர் பாலசுப்ரமணியனிடம் புகார் மனு அளித்தோம்.
மேலும், பேருந்துகளுக்கு திருவாண்டார் கோயிலில் நிறுத்தம் உள்ளதா? புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்துக்கு எத்தனை பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது? அதன் கால அட்டவணை என்பன உள்ளிட்ட கேள்விகளை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டோம்.
அதற்கு 30 பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பதில் அளிக்கப்பட்டது. ஆனால், பேருந்துகளின் கால அட்டவணையைத் தரவில்லை. இதனால், புதுச்சேரி வட்டாரப் போக்குவரத்து ஆணையருக்கு மேல் முறையீடு செய்தோம்.
அதற்கு புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்துக்கு இயக்க அனுமதி அளிக்கப்பட்டதற்கான கடிதத்தின் நகலை தரவில்லை. அதற்கு மாறாக, அரியாங்குப்பம், முத்தியால்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து விழுப்புரத்துக்கு இயக்க அனுமதி அளிக்கப்பட்டதற்கான கடித நகலையே தந்தனர்.
இதனால், புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்துக்கு செல்லும் 30 பேருந்துகளும் போக்குவரத்துத் துறையின் அனுமதி இன்றி இயக்கப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே, தில்லியில் உள்ள இந்திய தலைமை தகவல் ஆணையருக்கு மேல் முறையீடு செய்ய உள்ளோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.