புதுச்சேரியில் கடல் சீற்றம்
By DIN | Published On : 26th April 2019 07:27 AM | Last Updated : 26th April 2019 07:27 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் வியாழக்கிழமை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
இந்தியப் பெருங்கடல், அதை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது மேலும் வலுவடைந்த சனிக்கிழமை (ஏப். 27) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து சென்னை - நாகை இடையே கரையைக் கடக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கடலோர மாவட்டங்களில் வருகிற 29-ஆம் தேதி முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக புதுவை அரசின் மீன்வளத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
புதுவையில் தற்போது மீன்பிடி தடைக் காலம் அமலில் உள்ளது. இதனால் விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. ஆனால், சிறிய படகுகளில் சென்று மீன்பிடித்து வருகின்றனர். தற்போது கடல் லேசான கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இந்தக் கொந்தளிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே, மீனவர்கள் வியாழக்கிழமை முதல் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம். வியாழக்கிழமை முதல் 3 நாள்கள் படிப்படியாக 35 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
மீனவர்கள் தங்களது மீன்பிடி படகுகள், மீன்பிடி சாதனங்களை கடற்கரையோரமாக நிறுத்தாமல் பாதுகாப்பான இடங்களில் வைத்துக் கொள்ள வேண்டும். மீனவ கிராம பஞ்சாயத்துகள் ஒலி பெருக்கிகள் மூலம் மீனவர்களுக்கு புயல் குறித்த முன்னெச்சரிக்கை தகவல்களை அறிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, புதுச்சேரியில் வியாழக்கிழமை கடல் சீற்றமாகக் காணப்பட்டது. அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி கரையில் மோதின. இதனால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.