ஏனாம் தொகுதியைப் போல மற்ற தொகுதிகளிலும் சிஎஸ்ஆர் நிதி வசூலிக்க வேண்டும்
By DIN | Published On : 06th February 2019 09:53 AM | Last Updated : 06th February 2019 09:53 AM | அ+அ அ- |

புதுவை மாநிலத்தில் ஏனாம் தொகுதியைப் போல, மற்ற தொகுதிகளிலும் பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதியை (சிஎஸ்ஆர்) அரசு வசூலிக்க வேண்டும் என ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
முதல்வர் வே. நாராயணசாமிக்கு அந்த அமைப்பின் தலைவர்
பி. ரகுபதி, செயலர் எம். கனகராஜ் ஆகியோர் அனுப்பிய மனு:
புதுவை மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து பெருநிறுவன (கார்ப்பரேட்) சமூக பங்களிப்பு நிதி (சிஎஸ்ஆர்) பெறப்பட்டுள்ளது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டதற்கு, முதல்வரை தலைவராகக் கொண்டு 7 உறுப்பினர்களுடன் செயல்படும் குழு மூலம் கடந்த 10 ஆண்டுகளில் ஒரே ஒரு தொகுதியைக் கொண்ட ஏனாம் பிராந்தியத்தில் மட்டும் பல பெரு
நிறுவனங்களிடமிருந்து ரூ. 12 கோடி நிதிபெற்று, அந்தப் பகுதி
மேம்பாட்டுக்கு செலவிடப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளனர்.
இதிலிருந்து 23 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி பிராந்தியத்திலும், 5 தொகுதிகளைக் கொண்ட காரைக்கால் பிராந்தியத்திலும் பல பெரு நிறுவனங்கள் இருந்தும், எந்த ஒரு பெருநிறுவனத்திடமிருந்தும் சமூக பங்களிப்பு நிதி பெறப்படவில்லை என்பது தெரிய வருகிறது.
ஒரு தொகுதியைக் கொண்ட ஏனாம் பகுதியில் மட்டும் ரூ. 12 கோடி வசூலித்துள்ள நிலையில், புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்திலும் இந்த நிதியை வசூலிக்காதது ஏன்?
எனவே, தற்போது புதுவை அரசு கடும் நிதி நெருக்கடி காரணமாக மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலையில் உள்ளதை கருத்தில் கொண்டு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இரு பிராந்தியங்களில் உள்ள பெருநிறுவனங்களிடமிருந்து முறையே, பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதியைப் பெற்று, இப்பகுதிகளின் மேம்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...