செய்யாறு அருகே பள்ளி மாணவிக்கு திருமணம் நடத்த முயற்சி: அதிகாரிகள் விசாரணை
By DIN | Published On : 06th February 2019 09:48 AM | Last Updated : 06th February 2019 09:48 AM | அ+அ அ- |

செய்யாறு அருகே பள்ளி மாணவிக்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ள நிலையில், இதுகுறித்து சமூக நலத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர்.
செய்யாறு வட்டம், ஆக்கூர் கிராமப் பகுதியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளியின் மகள் அந்தப் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். 16 வயதான இந்த மாணவிக்கும், இவருக்கு தாய் வழி உறவினருக்கும் வரும் 11-ஆம் தேதி திருமணம் நடத்த குடும்பத்தினர் ஏற்பாடு செய்து வருகின்றனராம்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், மாவட்ட சமூக நல அலுவலர் மேற்பார்வையில், அனக்காவூர் வட்டார சமூக நல அலுவலர் தாரகேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் செல்வக்கனி, புவனேஸ்வரி மற்றும் தூசி காவல் நிலைய உதவி ஆய்வாளர் துரைசாமி ஆகியோர் ஆக்கூர் கிராமப் பகுதியில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, மாணவியின் பெற்றோர் திருமண பத்திரிக்கை வைக்க வெளியூர் சென்று இருந்ததாகத் தெரியவந்தது. உடனடியாக பள்ளிக்குச் சென்று திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாணவியிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும், இதுகுறித்து மாணவியின் பெற்றோரிடம் தொடர்பு கொண்டபோது, அவர்கள் மழுப்பலான பதில் கூறியதாகத் தெரிகிறது. அதன் காரணமாக, சமூக நலத் துறை அதிகாரிகள் மாணவியின் பெற்றோருக்கு அறிவுரை கூறினர். பின்னர், அந்த மாணவியை திருவண்ணாமலை மாவட்ட சமூகநலத் துறை அலுவலகத்துக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...