பிப். 9-இல் சிறை நிரப்பும் போராட்டம்
By DIN | Published On : 06th February 2019 09:52 AM | Last Updated : 06th February 2019 09:52 AM | அ+அ அ- |

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வலியுறுத்தி, வரும் 9-ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து அந்தக் கூட்டமைப்பின் கெளரவத் தலைவர் டி.ஆர். சேஷாச்சலம், தலைவர் ரைவ. ராஜேந்திரன், செயலாளர் ஏ. மார்ட்டின் கென்னடி ஆகியோர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுவை மாநிலத்தில் புதுச்சேரியில் 24 பள்ளிகளும், காரைக்காலில் 7 பள்ளிகளும், ஏனாமில் 1 பள்ளியும் என மொத்தம் 32 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இதில் 300 ஆசிரியர்கள், 50 ஊழியர்கள் என 350 பேர் பணியாற்றி வருகின்றனர்.
புதுவை கல்விச் சட்டம் 1987 மற்றும் 1996-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட விதிகள், அரசு ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என்பதை உறுதி செய்கிறது.
இந்த நிலையில், 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகள் அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த 2016 ஜனவரி முதல் அமல்படுத்தப்பட்டும், சொசைட்டி கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அரசால் தெரிவிக்கப்பட்ட நிலையில், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இதுவரை அமல்படுத்தப்படவில்லை.
எனவே, 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு உடனடியாக அமல்படுத்த வேண்டும், மாத ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை மாத இறுதி வேலைநாளில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நிலுவையில் உள்ள 4 மாத ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள தடையை நீக்கி காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 9-ஆம் தேதி சட்டப்பேரவையை முற்றுகையிட்டு சிறை நிரப்பும் போராட்டம் நடத்த உள்ளோம்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...