எம்.பி.க்கள் இடைநீக்கத்தை திரும்பப் பெற வேண்டும்: அதிமுக
By DIN | Published On : 04th January 2019 08:56 AM | Last Updated : 04th January 2019 08:56 AM | அ+அ அ- |

அதிமுக எம்.பிஹ.க்கள் இடை நீக்கம் செய்யப்பட்டதைத் திரும்பப் பெற வேண்டும் என புதுவை மாநில அதிமுக சட்டப்பேரவைக் கொறடா வையாபுரிமணிகண்டன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
இதுகுறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
ஜனநாயக அடிப்படையில் அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்காக குரல் எழுப்பி வருகின்றனர். தமிழர்களின் குரல் வளையை நசுக்கும் வகையில், மக்களவைத் தலைவர் அதிமுக எம்.பி.க்களை இடை நீக்கம் செய்துள்ளாற். இது
வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்.
தமிழக விவசாயிளுக்காக குரல் கொடுத்து வரும் அதிமுக உறுப்பினர்கள், பிரதமர் மோடியை காப்பாற்றவே போராட்டம் நடத்துவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளதையும் புதுவை மாநில அதிமுக வன்மையாகக் கண்டிக்கிறது. விவசாயிகளின் நலனைக் காக்கவும், தமிழர்களின் உரிமையை மீட்கவும் அல்லும் பகலும் அயராது அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு வலு சேர்க்க காங்கிரசுக்கு துளியும் எண்ணமின்றி, போராட்டத்தை விமர்சித்துள்ளது.
மாநிலத்தில் ஒரு பேச்சு, மத்தியில் ஒரு பேச்சு என பதவிக்காக மாற்றி, மாற்றிப் பேசி செயல்படும் காங்கிரஸ், திமுகவின் சாயம் விரைவில் வெளுக்கும்.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ், திமுக கூட்டணியும் விவசாயிகள் பிரச்னை குறித்து எந்த அக்கறையும் காட்டவில்லை என்பதற்கு தில்லி போராட்டம் ஒரு சான்று. தங்களின் அதிகாரம் பறி போகிறது என்பதற்காக அலறியடித்துக் கொண்டு தில்லியில் போராட்டம் நடத்த முதல்வர் தலைமையிலான காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் சென்றுள்ளன.
மேக்கேதாட்டு அணை பிரச்னையைப் பற்றி காங்கிரஸ், திமுக கூட்டணி போராட்டம் நடத்தாதது ஏன்? விவசாயிகளை விட, தமிழர்களின் உணர்வுகளை விட உங்களுக்கு பதவியும், அதிகாரமும்தான் முக்கியமா? என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.