சி.பி.எம்.எல். கட்சியினர் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 04th January 2019 09:33 AM | Last Updated : 04th January 2019 09:33 AM | அ+அ அ- |

புதுச்சேரி மாநில அரசைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், காரைக்காலில் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மக்கள் விடுதலை ஜனநாயக தொழிற்சங்கத்தினர் காரைக்காலில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, ஜனநாயக தொழிற்சங்க மையம், காரைக்கால் மாவட்டத் தலைவர் கே. செல்வம் தலைமை வகித்தார். தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பி. கோவிந்தராஜ், ஆர். அகிலன், ஏ. ராஜன், ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சாலை வரி என்ற பெயரில் டாடா ஏ.சி. வாகனம் இயக்கி தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும், சாலை வரி உயர்வைத் திரும்பப் பெற வேண்டும், மோட்டார் வாகனத்தின் உரிமத்தை பெயர் மாற்றம் செய்ய வருபவர்களை காத்திருக்க வைத்து, அலைக்கழிக்கும் போக்கை காரைக்கால் ஆர்.டி.ஓ. அலுவலக நிர்வாகம் கைவிட வேண்டும், தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிபிஎம்எல் (மக்கள் விடுதலை) கட்சி அரசியல் தலைமைக் குழுவைச் சேர்ந்த கே. தங்க தமிழ்வேலன், மாவட்டச் செயலாளர் கே. கணேசன், ஜனநாயக தொழிற்சங்க மாநிலக் குழு உறுப்பினர் சி. மணிமாறன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தியும், புதுச்சேரி மாநில அரசைக் கண்டித்தும் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சிபிஎம்எல் கட்சியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.