மண்பானை விற்பனை சரிவு !
By DIN | Published On : 04th January 2019 08:58 AM | Last Updated : 04th January 2019 08:58 AM | அ+அ அ- |

மண்பாண்டங்களை வாங்குவதில் மக்களின் ஆர்வம் குறைந்துள்ளதால், பொங்கல் பண்டிகைக்கான மண்பானைகளை விற்பனையும், உற்பத்தியும் சரிந்துள்ளது.
பழங்காலம் முதல் மண்ணால் செய்யப்பட்ட பொருள்களை உணவு தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு உபயோகங்களுக்கு தமிழர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக பண்டைய காலத் தமிழர்கள் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்ந்து வந்தனர். ஆனால், தற்போது நெகிழிக் பொருள்கள், அலுமினியம் ஆகியவற்றால் செய்யப்பட்ட பொருள்களைப் பயன்படுத்துவதால், மண்பாண்டங்கள் பயன்பாடு குறைந்து காணப்படுகிறது.
இதேபோல, பொங்கல் திருவிழாவின் போது, பொங்கல் வைக்க தமிழர்கள் மண்பாண்டங்களையே பயன்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது நாகரிகம் என்ற பெயரில் அலுமினியம், பித்தளை, சில்வர் பாத்திரங்களுக்கு மாறிவிட்டனர். இதன் காரணமாக மண்பாண்டப் பொருள்களின் பயன்பாடு குறைந்துவிட்டது. இதனால், அந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளோரும் பாதிக்கப்படுகின்றனர் .
புதுவை, அதையொட்டியுள்ள தமிழக கிராமங்களில் பொங்கல் பண்டிகைக்குத் தேவையான பானைகளை உற்பத்தி செய்யும் தொழிலில் மண்பாண்டத் தொழிலாளர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம், புதுச்சேரி கிராமங்களான வடமங்கலம், கூனிமுடக்கு, தென்னல், கென்டிகுப்பம், முருங்கப்பாக்கம், வில்லியனுôர், மதகடிப்பட்டு, கண்டமங்கலம், பெரிய பாபு சமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலும் பொங்கல் பானைகளை தயாரிக்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரியில் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் பொருட்டு, ஏரிகள் மற்றும் குளக்கரைப் பகுதிகளில் களிமண் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், மண்பாண்டத் தொழிலாளர்கள் அருகே உள்ள தமிழக கிராமங்களில் இருந்து மண்ணை வாங்கி வந்து மண்பாண்டங்களைத் தயார் செய்து வருகின்றனர். இதன் காரணமாக மண்பாண்டங்களின் தயாரிப்புச் செலவு அதிகரித்து, உற்பத்தி குறைந்துள்ளது. மேலும், பொதுமக்கள் மண்பாண்டங்களை வாங்க ஆர்வம் காட்டாததால், விற்பனையும் குறைந்துள்ளது.
இதுகுறித்து வடமங்கலம் பகுதியைச் சேர்ந்த மண்பாண்ட உற்பத்தியாளர் எஸ்.குமார் கூறியதாவது: புதுச்சேரி எல்லையையொட்டிய புதுவை, தமிழக கிராமங்களில் முன்பு ஆயிரம் குடும்பங்கள் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். தற்போது வருமானக் குறைவு காரணமாக 500 குடும்பங்கள் மட்டுமே இந்தத் தொழிலை செய்து வருகின்றனர்.
புதுச்சேரியில் களிமண் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், நாங்கள் விழுப்புரம் மாவட்டம், பாலூர் பட்டாம்பாக்கத்திலிருந்து களிமண்ணை டிராக்டர் டிப்பர் லோடு ரூ. 5 ஆயிரத்துக்கு வாங்கி வந்து, பானைகளை உற்பத்தி செய்கிறோம். அதிக விலைக்கு களிமண் வாங்குவதால், பானை உற்பத்திக்குக் கூடுதல் செலவாகிறது. இதனால், எங்களது லாபம் குறைகிறது. இதனால், குறைந்த அளவுக்கே, அதுவும் சிறிய அளவிலான பானைகளையே தயார் செய்து வருகிறோம்.
மேலும், மக்கள் மத்தியிலும் மண்பாண்டப் பொருள்களை வாங்குவதில் ஆர்வம் இல்லாததால், விற்பனையும் வெகுவாகக் குறைந்துள்ளது.
இதன் காரணமாக எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள சிலரும் வேறு வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
பாரம்பரியமிக்க மண்பாண்டத் தொழிலைக் காக்க புதுவை அரசு மண்பாண்டத் தொழில் செய்வோருக்கு ஏரிகளில் களிமண் எடுக்க அனுமதிக்க வேண்டும். வெளிமாநிலத்திலிருந்து களிமண் வாங்கி வரும் போது, போலீஸார் பிடித்து அபராதம் விதிப்பதிலிருந்து எங்களுக்கு விலக்களிக்க வேண்டும். மேலும், நிதியுதவியும் வழங்க வேண்டும். அதே போல, பொதுமக்களும் உடலுக்கு உகந்த மண்பாண்டங்களை வாங்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து புதுவையைச் சேர்ந்த மண்பாண்ட விற்பனையாளர் வைதேகி கூறியதாவது: முன்பெல்லாம் 7 படி, 9 படி பானைகளை பொங்கல் வைப்பதற்காக பொதுமக்கள் வாங்கிச் செல்வர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வெறும் சாஸ்திர சம்பிரதாயத்துக்காக அரை படி பானை ஒன்றே ஒன்றை மட்டுமே வாங்கிச் செல்கின்றனர். இதனால், விற்பனை வெகுவாகக் குறைந்துள்ளது என்றார் அவர்.
குறைந்தபட்சம் பொங்கல் பண்டிகையின் போதாவது, தமிழர்கள் மண்பாண்டங்களை உபயோகித்து உடல் நலத்தைப் பேணிக் காப்பதுடன், மண்பாண்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையிலும் ஒளியேற்ற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.