மின் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
By DIN | Published On : 04th January 2019 09:31 AM | Last Updated : 04th January 2019 09:31 AM | அ+அ அ- |

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுவை மின் ஊழியர்கள் வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். இதன் காரணமாக மின் துறையில் பணிகள் பாதிக்கப்பட்டன.
புதுவை மின் துறையில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில் 2,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு 5 -ஆவது ஊதியக் குழு பரிந்துரைத்த சம்பள பிரச்னைகளை களைய உருவாக்கப்பட்ட தனி நபர் குழுவின் பரிந்துரையின் பேரில், ஊழியர்களுக்கு சம்பளம் மாற்றம் செய்யப்பட்டது.
ஆனால் புதுவை அரசும், மின் துறை நிர்வாகமும் சம்பள மாற்றம் தொடர்பாக மத்திய அரசுக்கு அனுப்பி அதற்கான ஒப்புதலைப் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், நியமன விதிகளில் திருத்தம், பதவி உயர்வில் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுவதாக ஊழியர்கள் புகார் தெரிவித்தனர். காலியாக உள்ள பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும், தனி நபர் குழு பரிந்துரைத்த ஊதிய உயர்வை அமல்
படுத்த வேண்டும், ஊழியர்களின் ஊதியத்தைக் குறைக்கக் கூடாது, மின் மீட்டர் கணக்கீட்டுப் பணியைத் தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை அனைத்துத் தொழில்சங்கங்களின் போராட்டக் குழு சார்பில், மின் துறை ஊழியர்கள் வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் 2 ஆயிரம் மின் துறை ஊழியர்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், மின் துறையில் மேற்கொள்ளப்படும் மின் கட்டண வசூல், புதிய மின் இணைப்புகளை வழங்குதல், மின் துண்டிப்பைச் சரிசெய்தல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் நிறுத்தப்பட்டன. இதனால், பொதுமக்கள் அவதியடைந்தனர்.
புதுச்சேரி வம்பாகீரப்பாளையத்தில் உள்ள மின் துறை தலைமை அலுவலகம் எதிரே போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஜி. ராமசாமி தலைமையில் 300 -க்கும் மேற்பட்ட ஊழியர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தர்னாவில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என மின் துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.
புதுச்சேரியில் மின் துறை ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தால், நாளொன்றுக்கு வசூலாகும் ரூ. 5 கோடி வரையிலான மின் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை என மின் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.