அதிரடிப்படை காவலர் மீது தாக்குதல்: போலீஸார் உள்பட 4 பேர் காயம்

புதுச்சேரியில் அதிரடிப் படை காவலர் மீது சோடா பாட்டில் வீசி தாக்குதல்  நடத்தியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 போலீஸார் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.
Updated on
1 min read

புதுச்சேரியில் அதிரடிப் படை காவலர் மீது சோடா பாட்டில் வீசி தாக்குதல்  நடத்தியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 போலீஸார் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.
புதுச்சேரியில் இருந்து வழுதாவூர் சாலை வழியாக சிறப்பு அதிரடிப்படை போலீஸார் பழனிராஜா, அருள்வேலன், பி.ஜெகதீஷ் ஆகியோர் தனித் தனி பைக்குகளில் புதன்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் குருமாம்பேட்டை அருகே மோட்டார் பைக்கில் வந்த நடராஜன் (33) என்பவரை வழிமறித்து விசாரித்தனர். அவர் மது மயக்கத்தில் இருந்ததால், போலீஸாரிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவருடன் வந்த நண்பர் தாமோதரன், நடராஜனை சமாதானப்படுத்தி, அழைத்துச் சென்றார். இதையடுத்து, போலீஸார் மோட்டார் பைக்கில் திரும்பிச் சென்றனர்.
போலீஸார் வழி மறித்ததால் ஆத்திரமடைந்த நடராஜன், தாமோதரனை வழியில் இறக்கிவிட்டு, மோட்டார் பைக்கில் போலீஸாரை பின் தொடர்ந்தாராம்.  இரு தரப்பினரது மோட்டார் பைக்குகளும் ஊசுட்டேரி தனியார் மருத்துவமனை அருகே வந்த போது, நடராஜன் சோடா பாட்டிலால் அதிரடிப்படை காவலர் ஜெகதீஷை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 
இதில், பலத்த காயமடைந்த ஜெகதீஷ்  நிலை தடுமாறி மோட்டார் பைக்குடன் சாலையில் விழுந்தார். இதன் காரணமாக பழனிராஜா, அருள்வேலன், நடராஜன் ஆகியோரது பைக்குகளும் ஒன்றோடு ஒன்று மோதியது. இதில் பைக்குகளில் பயணித்த 4 பேரும் காயமடைந்தனர். 
இவர்களை அந்த வழியாகச் சென்றவர்கள் மீட்டு, அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.  இதுகுறித்து ஜெகதீஷ் அளித்த புகாரின் பேரில், வில்லியனூர் போலீஸார், நடராஜன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், யார் மீது தவறு என்று விசாரணைக்குப் பிறகே தெரிய வரும் என போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com