காவல் அதிகாரிகளுக்கு ஆளுநர் மாளிகையில் தேர்வு
By DIN | Published On : 07th January 2019 09:50 AM | Last Updated : 07th January 2019 09:50 AM | அ+அ அ- |

புதுவை மாநிலத்தில் உள்ள 29 காவல் நிலைய அதிகாரிகளுக்கு புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஆளுநர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை தேர்வை நடத்தினார்.
காவலர் தேர்வின் போது கற்றது தொடங்கி, புதிதாக கற்ற விஷயங்கள் குறித்தான வகையில் இந்தத் தேர்வு நடைபெற்றது. குறிப்பாக, துப்பறியும் திறன், சைபர் கிரைம், சட்ட விதிகள் ஆகியவை தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டன.
இந்தத் தேர்வின் போது, ஐஜி சுரேந்தர சிங் யாதவ், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர்கள் (எஸ்எஸ்பி) அபூர்வ குப்தா, ராகுல் அல்வால் உள்ளிட்ட முக்கிய காவல்துறை உயரதிகாரிகள் உடனிருந்தனர்.
இதுதொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண் பேடி வெளியிட்ட தகவல்: காவல் துறையில் பலம், பலவீனம், வாய்ப்புகள், சவால்கள் ஆகியவை ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டது. இந்த விஷயத்தில் போலீஸ் தலைமையகத்துக்குத் தேவையான உதவியை உள்துறையிடம் கேட்க உள்ளோம். தேர்வு எழுதிய 29 பேரில், 26 பேர் ஏ கிரேடு பெற்றனர். அனைவரும் சிறப்பாகத் தேர்வுக்கு தயாராகி வந்து எழுதினர். அவர்களுக்கு பாராட்டு கடிதம் ராஜ்நிவாஸிலிருந்து அனுப்பப்படும்.
இந்தத் தேர்வில் திருபுவனை காவல் நிலைய அதிகாரி கே. பிரியாவும், முதலியார்பேட்டை காவல் நிலைய அதிகாரி பாபுஜியும் முதலிடம் பெற்றனர். தொடர்ந்து, காவல் நிலைய அதிகாரிகளுடன் கலந்துரையாடியபோது, இதர பிரச்னைகள் தொடர்பாகவும் தெரிய வந்தது. அதன் அடிப்படையில் சில திருத்தங்களும், புதுச்சேரிக்கு வெளியில் சில பயிற்சிகளும் தேவைப்படுகிறது என ஆளுநர் வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது.