மின் ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்
By DIN | Published On : 07th January 2019 09:52 AM | Last Updated : 07th January 2019 09:52 AM | அ+அ அ- |

மின் துறை ஊழியர்களின் போராட்டத்தை அரசு விரைந்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என புதுவை மாநில அதிமுக சட்டப்பேரவைக் கொறடா வையாபுரி மணிகண்டன் எம்எல்ஏ தெரிவித்தார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
புதுவை பிரதேச ஆளும் காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு நலத் திட்டங்களையும், நடைமுறையில் உள்ள திட்டங்களையும் செயல்படுத்த முடியாமல் அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது.
இதற்கு தார்மிகப் பொறுப்பேற்க வேண்டிய முதல்வர், அமைச்சர்கள் தங்களது இயலாமையை மறைக்க ஆளுநர் மாளிகையைக் கைகாட்டி தப்பிக்க முயற்சிக்கின்றனர். அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது.
மின் துறை ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக பல முறை அரசை அணுகியதுடன், பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர்.
இதையெல்லாம் அரசு கண்டுகொள்ளாததால், வேறு வழியின்றி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மின்சார விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் பிளஸ் 2 பொதுத் தேர்வும், மார்ச் மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வும் தொடங்கவுள்ளன. இதற்காக மாணவர்கள் இரவு, பகலாக தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.
பருவ நிலை மாற்றத்தால் கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
மின்சாரம் இல்லாவிட்டால் தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளில் சரியான நேரத்துக்கு நீரேற்றுவதில் தொடங்கி பல்வேறு பணிகளுக்கு மின்சாரத்தின் தேவை உள்ளது.
புதுச்சேரியில் மின் மாற்றிகள் பழுதாகிவிட்டாலோ, வெடித்து விட்டாலோ ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின் விநியோகம் பாதிக்கப்படும். வேண்டாத நிகழ்வுகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. இது மக்களை நேரடியாக வீதியில் இறங்கிப் போராட்டம் செய்ய தூண்டுவதாக அமையும்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு மின் துறை ஊழியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மின் துறை தொழிலாளர்களும் பொதுமக்களின் நலனையும், தங்களின் பணியின் முக்கியத்துவத்தையும் கருதி அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.