இருவேறு சம்பவங்களில் பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
By DIN | Published On : 09th June 2019 12:40 AM | Last Updated : 09th June 2019 12:40 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் இருவேறு சம்பவங்களில் இரு பெண்களிடம் 9 பவுன் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
புதுவை மாநிலம், அரியாங்குப்பம் சிவலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரகுராமன் (40). புதுவை சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் (பிஆர்டிசி) நடத்துநராகப் பணியாற்றி வருகிறார். இவர், வெள்ளிக்கிழமை தனது மனைவி சகிலாதேவி மற்றும் மகளுடன் இரும்பை சிவன் கோயிலுக்கு பைக்கில் சென்றார். பின்னர், அங்கிருந்து அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தனர். தட்டாஞ்சாவடி தொழில்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, அவர்கள் பின்னால் தலைக் கவசம் அணிந்தபடி பைக்கில் வந்த 2 பேர், திடீரென சகிலாதேவி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்து கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், காவல் உதவி ஆய்வாளர் கலையரசன் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்: லாசுப்பேட்டை தேவகி நகர் பிரதான சாலைப் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் மனைவி முத்தம்மாள் (45). ஆசிரம ஊழியரான இவர், வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வெளியே நின்றிருந்த போது, அங்கு வந்த மர்ம நபர்கள் முத்தாம்மாளிடம் முகவரி கேட்பது போல நடித்து, அவரிடமிருந்து 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து முத்தம்மாள் லாசுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.